கடைசி ஓவர் வரை பரபரப்பு.. சதம் விளாசி இந்திய அணிக்கு பயம் காட்டிய ஜிம்பாப்வே வீரர் ரஸா!

கடைசி ஓவர் வரை பரபரப்பு.. சதம் விளாசி இந்திய அணிக்கு பயம் காட்டிய ஜிம்பாப்வே வீரர் ரஸா!

கடைசி ஓவர் வரை பரபரப்பு.. சதம் விளாசி இந்திய அணிக்கு பயம் காட்டிய ஜிம்பாப்வே வீரர் ரஸா!

மூன்று போட்டிகளையும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்திய அணி.

இந்தியா ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 18 ஆம் தேதியில் தொடங்கியது. மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளை 10 விக்கெட்டுகள் மற்றும் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கைப்பற்றியது இந்திய அணி. இந்நிலையில் தொடரின் கடைசி போட்டி இன்று நடைபெற்றது.

டாஸ்ஸை வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்க் செய்த இந்திய அணி சுப்மன் கில்லின் அதிரடி சதத்தால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய இளம் வீரர் சுப்மன் கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 97 பந்துகளில் 15 பவுண்டரிகள், 1 சிக்சர் அடித்த கில் 130 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இதுவரை ஜிம்பாப்பே மண்ணில் அந்த அணிக்கு எதிராக அதிகபட்ச ரன்களை அடித்திருந்த சச்சின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடிய ஜிம்பாப்பே அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இந்நிலையில் நான்காவது வீரராக களமிறங்கிய சிகந்தர் ராஷா அதிரடியாக விளையாடி இந்தியாவிற்கு எதிராக தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் கடைசி வரை நிலைத்து நின்று போட்டியை விறுவிறுப்பான இடத்திற்கு கொண்டு சென்றார். அவர் களத்தில் இருந்த வரை ஜிம்பாப்வே அணி எப்படியும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அந்த அணியின் ரசிகர்களுக்கு இருந்திருக்கும். அதேபோல், இந்திய அணியின் ரசிகர்களுக்கும் சற்றே தோல்வி பயத்தை காட்டிவிட்டார்.

இருப்பினும், வெற்றி பெற 9 பந்துகளில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷர்துல் தாகூர் பந்தில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 49.3 ஓவர்களில் 276 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்பே அணியை வீழ்த்தியது. ஜிம்பாப்வே வீரர் ரஸா கடந்த 6 ஒருநாள் போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்துள்ளார். ஒரே மாதத்தில் இந்த மூன்று சதமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் சேஸிங்கின் போதுதான் இந்த சதங்களை அடித்துள்ளார்.

இதனால் தொடரின் மூன்று போட்டிகளையும் வென்று இந்திய அணி ஜிம்பாப்பே அணியை ஒயிட் வாஷ் செய்து சிறந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 15வது வெற்றியை பதிவு செய்துள்ளது. சதம் விளாசிய சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றார். அதேபோல், சுப்மன் கில் இந்தத் தொடரில் 245 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் 205 ரன்கள் எடுத்திருந்தார். இந்த இரண்டு தொடரிலும் அவருக்கு தொடர் நாயகன் விருது கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com