1000வது ஒருநாள் போட்டி! உலக கிரிக்கெட்டையே வியக்க வைக்கும் இந்திய அணியின் வெற்றிப் பயணம்!

1000வது ஒருநாள் போட்டி! உலக கிரிக்கெட்டையே வியக்க வைக்கும் இந்திய அணியின் வெற்றிப் பயணம்!
1000வது ஒருநாள் போட்டி! உலக கிரிக்கெட்டையே வியக்க வைக்கும் இந்திய அணியின் வெற்றிப் பயணம்!

சர்வதேச கிரிக்கெட்டில் எந்த அணியும் இதுவரை நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறது இந்திய அணி. ஆயிரமாவது ஒருநாள் போட்டியை விளையாட இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இந்திய அணியின் 1000 ஆவது போட்டியாக அமையவுள்ளது.

60 ஓவர்கள் - 55 ஓவர்கள் - 50 ஓவர்கள்:

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் பரவிய விளையாட்டு. இன்று அவர்களையே மிஞ்சுமளவுக்கு சாதனைகளால் நிரம்பியிருக்கிறது இந்திய கிரிக்கெட்டின் வரலாறு. காலத்திற்கு ஏற்ப மாற்றத்தை சந்தித்திருக்கின்றன, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள். தொடக்கத்தில் 60 ஓவர்கள், 55 ஓவர்கள் என நடத்தப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பின்னர் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டு, தற்போது அப்படியே நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்திய அணியும் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது.

1974-இல் தொடங்கிய இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட் பயணம்:

பாரம்பரிய டெஸ்ட் போட்டிகளுக்கு மத்தியில் காலத்தின் தேவை கருதி, 1971 ஆம் ஆண்டு முதன்முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. முதல் போட்டியில் இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதுவரை சுமார் 28 அணிகள் சேர்ந்து 4,000 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளன. இதில் இந்திய அணியின் பங்களிப்பு மலைக்க வைக்கிறது. இதுவரை 999 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி மட்டும் விளையாடியிருக்கிறது. 1974 ஆம் ஆண்டு இந்திய அணி முதன்முறையாக ஒருநாள் போட்டியில் விளையாடியது.

அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 55 ஓவர்களே கொண்ட இந்தப்போட்டியில் விளையாடிய பெருமை தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவனுக்கும் உண்டு.

அசத்தலான முதல் வெற்றி:

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் முதல் வெற்றி 1975-ஆம் ஆண்டு கைகூடியது. அந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் கிழக்கு ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சுனில் கவாஸ்கர், பரூக் இஞ்சினியர், பிஷன் சிங் பேடி உள்ளிட்ட ஜாம்பவான்கள் அடங்கிய இந்திய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை ஈட்டியது. இதன்பின்னர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மலைக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது இந்திய அணி. 1983-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக உலகக்கோப்பையை வென்றது. இதன்பின்னர் 2011-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது.

சச்சின் டெண்டுல்கருக்கு தனிப்பெருமை உண்டு:

1974-ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை விளையாடியுள்ள 999 போட்டிகளில் 518 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 431 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. 9 போட்டிகளில் டையில் முடிந்துள்ளன. 41 போட்டிகள் முடிவு தெரியாதவையாக உள்ளன. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றி விகிதம் 54.54 ஆக உள்ளது. இந்திய அணி 100 ஆவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடியது. அந்தப்போட்டியில் கபில் தேவ் தலைமையில் இந்திய அணி களம் கண்டது. 500-ஆவது போட்டியில் சவ்ரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்த்து விளையாடியது. இந்திய அணியின் 200 ஆவது போட்டி தொடங்கி, 300, 500, 600, 700, 800 ஆவது போட்டிகளில் விளையாடிய பெருமை சச்சின் டெண்டுல்கருக்கு உண்டு.

இப்படி சாதனை சரித்திரங்களுக்கு சொந்தமான இந்திய அணி, இப்போது ஆயிரமாவது போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ள காத்திருக்கிறது இந்திய அணி. முதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் இடம்பெற்றிருந்தது போலவே ஆயிரமாவது போட்டியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளது. வரலாறுகள் தான் எவ்வளவு சுவாரசியானவை.

1000வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு

ஆயிரமாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தீபக் ஹூடா தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிறார். 

அணி விவரம்:

1. ரோகித் சர்மா
2.இஷாந்த் கிஷன்
3.விராட் கோலி
4.ரிஷப் பண்ட்
5.சூர்ய குமார் யாதவ்
6.தீபக் ஹூடா
7.வாஷிங்டன் சுந்தர்
8.ஷர்துல் தாக்கூர்
9.முகமது சிராஜ்
10.சாஹல்
11.பிரஷித் கிருஷ்ணா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com