மீண்டும் 1436 கி.மீ தூரம் நடை பயணமாக வந்த ரசிகர்! நேரில் அழைத்து சந்தித்த தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தீவிர ரசிகரான அஜய் கில், தனது சொந்த ஊரான ஹரியானாவின் ஜலான் கெடா (Jalan Kheda) கிராமத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி வரை தோனியை பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தில் இரண்டாவது முறையாக நடைவழி பயணமாக 1436 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வந்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் கில் இரண்டாவது முறையாக தோனியை பார்ப்பதற்காக நடைவழியாக வந்து மேற்கொண்ட முயற்சி இது.
கடந்த முறை ராஞ்சியில் தோனி இல்லாத காரணத்தினால் அவரை பார்க்க முடியாமல் ஊர் திரும்பினார் கில். இந்த நிலையில் இம்முறை தோனி ராஞ்சியில் இருக்க தனது வெறித்தனமான ரசிகரான கில்லை, தனது பண்ணை வீட்டுக்கு அழைத்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார் தோனி.
அதோடு அவருக்கு ஊர் திரும்புவதற்கான விமான டிக்கெட்டையும் போட்டுக் கொடுத்துள்ளார் தோனி.
“இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது தான் எனது விருப்பம். இதை தோனி இடம் சொன்னேன். இருந்தாலும் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு நான் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திக் கொண்டேன். இப்போது அவரை பார்த்ததும் மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. நிச்சயம் அதை செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார் அஜய் கில்.
அஜய் கில், பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு அவரது ஊரில் முடி திருத்தும் பணியை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.