ஹைதராபாத் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி!

ஹைதராபாத் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி!
ஹைதராபாத் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி!

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் நடப்பு ஐபிஎல் சீசனின் 33-வது லீக் ஆட்டத்தில் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். 

முதல் ஓவரிலேயே நோர்க்யா அசத்தல்!

ஹைதராபாத் அணிக்காக டேவிட் வார்னர் மற்றும் சாஹா தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை டெல்லி அணிக்காக நோர்க்யா (NORTJE) வீசினார். வார்னரை ஆட்டத்தின் மூன்றாவது பந்தில் டக் அவுட் செய்து வெளியேற்றினார். வார்னரின் பேட்டில் பட்ட பந்து லீடிங் எட்ஜானது. 

நிதான ஆட்டம் ஆடிய பேட்ஸ்மேன்கள்!

தொடர்ந்து ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களத்திற்கு வந்தார். சாஹாவுடன் சேர்ந்து இன்னிங்ஸை நிதானமாக அணுகினார். இருந்தும் சாஹா 17 பந்துகளில் வெறும் 18 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார். பவர் பிளே ஓவர் முடிவில் அந்த அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது. 

பத்தாவது ஓவரில் வில்லியம்சன்னும் 26 பந்துகளில் 18 ரன்களில் வெளியேறினார். அடுத்த இரண்டே பந்துகளில் மனிஷ் பாண்டேவும் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

தொடர்ந்து ஜாதவ், ஹோல்டர், சமாத், ரஷீத் கான், சந்தீப் ஷர்மா என விக்கெட்டுகளை ஹைதராபாத் அணி இழந்துக் கொண்டே இருந்தது. இதில் ரஷீத் மற்றும் சந்தீப் ரன் அவுட்டாகி இருந்தனர். 

ஆறுதல் கொடுத்த சமாத்!

இளம் வீரர் அப்துல் சமாத் 21 பந்துகளில் 28 ரன்களை சேர்த்து ஹைதராபாத் அணிக்கு ஆறுதல் கொடுத்தார். விக்கெட்டுகள் ஒரு பக்கம் வீழந்துக் கொண்ட இருந்தாலும் சமாத், சமத்தாக விளையாடி இருந்தார். ரஷீத் கான் 22 ரன்களை எடுத்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 134 ரன்களை எடுத்தது அந்த அணி. 

மூன்று விக்கெட்டுகளை அள்ளிய ரபாடா!

டெல்லி அணிக்காக ராபாடா 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். மொத்தம் மூன்று விக்கெட்டுகளை ரபாடா வீழ்த்தி இருந்தார். அதே போல அக்சர் பட்டேல் (2) மற்றும் நோர்க்யா (2) விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை டெல்லி அணி விரட்ட தொடங்கியது. 

தவான் - பிருத்வி ஷா!

டெல்லி அணிக்காக தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் பிருத்வி ஷா களம் கண்டனர். பிருத்வி மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் வெளியேறினார். இருந்தும் தவான் வழக்கம் போல 37 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார். இந்த சீசனின் லீடிங் ரன் ஸ்கோரர் என்பதை தவான் நிரூபித்திருந்தார். இந்தியா, அமீரகம் என எங்கு சென்று விளையாடினாலும் எனது ரன் வேட்டையை தடுக்க முடியாது என்பது போலவே அவரது ஆட்டம் இருந்தது. இந்த சீசனில் இதுவரையிலான ஆட்டத்தில் 49 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் என  422 ரன்களை அவர் எடுத்துள்ளார். தவனும், ஷ்ரேயஸ் ஐயரும் 52 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். 

ஷ்ரேயஸ் ஐயர் - பண்ட்!

தவான் வெளியேறியதால் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் களத்திற்கு வந்தார். களத்தில் செட்டாகி இருந்த ஷ்ரேயஸ் ஐயர் உடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார் ரிஷப். காயத்திலிருந்து மீண்டுள்ள ஷ்ரேயஸ் 41 பந்துகளில் 47 ரன்களை குவித்தார். பண்ட் 21 பந்துகளில் 35 ரன்களை குவித்தார். முடிவில் டெல்லி அணிக்கு தேவைப்பட்ட வெற்றியை சிக்சர் விளாசி ஷ்ரேயஸ் உறுதி செய்தார். இந்த ஆட்டத்தில் 13 பந்துகள் எஞ்சியிருக்க டெல்லி வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்திலேயே இருக்கிறது. 

சன்ரைஸர்ஸ் வீழ்ந்தது எங்கே?

பேட்டிங்கில் கூடுதலாக ஹைதராபாத் அணி 20 - 30 ரன்களை கூடுதலாக எடுத்திருந்தால் ஆட்டத்தில் எதிரணிக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். மறுபக்கம் பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், ரஷீத், ஜேசன் ஹோல்டரை தவிர பெரிய அளவில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் கொண்ட பவுலர்கள் இல்லாதது பின்னடைவு. அதுவும் ஆட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் ஹைதராபாத் அணி வீரருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது மனதளவில் தாக்கத்தை கொடுத்திருக்கலாம் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன. அடுத்த போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் என நம்புவோம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com