சிறந்த கிரிக்கெட்டர் சச்சினா.... கோலியா? கச்சிதமாக பதில் சொன்ன கபில்தேவ்!

சிறந்த கிரிக்கெட்டர் சச்சினா.... கோலியா? கச்சிதமாக பதில் சொன்ன கபில்தேவ்!
சிறந்த கிரிக்கெட்டர் சச்சினா.... கோலியா? கச்சிதமாக பதில் சொன்ன கபில்தேவ்!

ஜாம்பவான் சச்சின், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோரில் சிறந்த வீரர் யார் என்ற விவாதம் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் முன்னாள் கேப்டன் விராட் கோலி. முன்பு கடுமையான விமர்சனங்களால் விமர்சிக்கப்பட்ட விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்தும் விலக்கப்பட்டார். இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக அவருடைய பேட்டிங் கடந்த சில ஆட்டங்களில் அமைந்து வருகிறது.

சமீபத்திய உதாரணமாக, டி20யில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம், வங்கதேசம் (1 சதம்) மற்றும் இலங்கைக்கான ஒருநாள் தொடரில் 2 சதம் அடித்து பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார் விராட். அதிலும் குறிப்பாக, இலங்கைக்கான சதத்தின்போது ஜாம்பவான் சச்சின் சாதனைகள் சிலவற்றை முறியடித்தார். இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கரா, விராட் கோலியா என விவாதங்கள் எழத் தொடங்கின.

இதுகுறித்து பதிலளித்த முன்னாள் கிரிக்கெட் வீரரான கெளதம் கம்பீர், “டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது” என தெரிவித்திருந்தார். டெண்டுல்கர் விளையாண்ட காலக்கட்டம் வேறு; விதிமுறைகள் வேறு. ஆனால், இன்று எல்லாம் மாறிவிட்டது" என்று கம்பீர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், “அனைத்து தலைமுறையுமே வெவ்வேறு விதத்தில் வளர்ந்து வருகின்றன. என்னுடைய காலத்தில் கவாஸ்கர் சிறந்த வீரராக இருந்தார். அதன்பிறகு, டிராவிட், சச்சின், ஷேவாக் உள்ளிட்ட தலைமுறையினர் சாதித்தனர். தற்போது ரோகித், விராட் கோலி ஆகியோர் சிறந்து விளங்குகின்றனர். இனிவரும் காலங்களில் விராட் கோலியைவிட சிறந்த பேட்ஸ்மேன்கள் உருவாவார்கள். சில வீரர்களைப் பிடிக்கும் அல்லது பிடிக்காது என்பதற்காக 11 வீரர்கள் கொண்ட போட்டியில் ஒருவர் மற்றும் இருவரை சிறந்த வீரராகத் தேர்வு செய்ய நான் விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.

இதேபோன்ற கேள்வியை ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனான பாட் கம்மின்ஸிடம், சக வீரரான உஸ்மான் கவாஜா எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த கம்மின்ஸ், விராட் கோலியையே தேர்வு செய்திருக்கிறார். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை சச்சினும் கோலியும் சிறந்த வீரரகளாகவே கருதப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் விளையாடும் காலங்களும் மாற்றங்களும் வேறானவை.

சச்சின் ‘கிரிக்கெட்டின் கடவுள்’ எனவும், விராட் கோலி ‘ரன் மெஷின்’ எனவும் அழைக்கப்படுகிறார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் 49 சதங்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்துள்ளார். விராட் கோலி தற்போது வரை ஒருநாள் கிரிக்கெட்டில் 46 சதங்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 74 சதம் அடித்துள்ளார். இதில் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் 4 சதம் அடித்தால், சச்சின் சாதனையை முறியடித்துவிடுவார். அதை கோலி, இந்த ஆண்டுக்குள்ளேயே செய்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com