“என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி” - தீபிகா குமாரி
சர்வதேச வில்வித்தை விளையாட்டு அரங்கில் மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ள இந்தியாவின் தீபிகா குமாரி, அனைவரும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் வில்வித்தையில் ஹாட்ரிக் தங்கப்பதக்கத்தை வென்று சாதித்துள்ளார் இந்தியாவின் தீபிகா குமாரி. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை போட்டியில் (மூன்றாம் நிலை) ஒற்றையர், மகளிர் மற்றும் கலப்பு அணி என மூன்று விதமான போட்டிகளிலும் பங்கேற்ற அவர், அதில் தங்கம் வென்றுள்ளார். குறிப்பாக ஒற்றையர் ரீகர்வ் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் மீண்டும் சர்வதேச அரங்கில் நம்பர் 1 வில்வித்தை வீராங்கனை என்ற அந்தஸ்தை எட்டியுள்ளார் அவர்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு தன் நன்றியை தெரிவித்துள்ளார் தீபிகா குமாரி. “உங்கள் அன்புக்கும், ஆசீர்வாதத்திற்கும் எனது நன்றி. என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார் தீபிகா குமாரி.
தீபிகா குமாரி வெற்றிக் கதை!
ஆனால் அவரது அம்மா கீதா தனது மகளை மருத்துவராக பார்க்க வேண்டும் என கனவு கொண்டிருந்திருக்கிறார். இருப்பினும் மகளின் விருப்பத்திற்கு தடை ஏதும் சொல்லாத அவர் பயிற்சி பெற அனுமதித்துள்ளார். ஆரம்ப நாட்களில் தீபிகாவின் வில்வித்தை பயிற்சிக்கு தேவைப்படும் நிதி ஆதாரத்தை திரட்ட முடியாமல் அவரது பெற்றோர் திகைத்துள்ளனர்.
எப்படியோ 2005 வாக்கில் அர்ஜூன் வில்வித்தை பயிற்சி அகாடமியில் பயிற்சிக்கு சேர்ந்துள்ளார். ஒரே ஆண்டில் தனது திறனை நிரூபித்து டாடா வில்வித்தை பயிற்சி அகாடமியில் பயிற்சிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு அவர் வீட்டுக்கே திரும்பவில்லை. கேடட் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை 2009இல் வென்ற பிறகே வீட்டுக்கு திரும்பினார். அதன் பிறகு அவரது வாழ்வில் அனைத்தும் ஏறுமுகம்தான். 2010 தொடங்கி காமன்வெல்த், ஆசிய விளையாட்டுகள், ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப், உலக கோப்பை மற்றும் உலக சாமியன்ஷிப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார் தீபிகா.
2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய அணியின் தங்க வேட்கையை தணிப்பார் என எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. ஆனால் பதக்கம் ஏதும் வெல்லாமல் ஏமாற்றினார். தொடர்ந்து 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வெல்ல தவறினார்.
அவரது வாழ்க்கை கதை LADIES FIRST என்ற ஆவணப்படமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது உலக கோப்பை வில்வித்தை போட்டியில் அவர் வென்றுள்ள தங்கம் மீண்டும் ஒலிம்பிக் பதக்கத்தை அவர் வெல்வார் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. அடுத்த மாதம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் அவர் பங்கேற்க உள்ளார். எதிர்வரும் போட்டிகளிலும் தீபிகா இந்த வெற்றி நடையை தொடங்குவார் என நம்புவோம்.