“தலைவர், அண்ணனுக்கு பிறந்ததாள்”- வாழ்த்து மழையில் தோனி..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தோனியின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் #HappyBirthdayDhoni என்ற ஹேஸ்டேக்குடன் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
இப்போது தோனியின் சக வீரர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா தன்னுடைய இன்ஸ்டா பதிவில் "என்னுடைய சகோதரர், தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் எப்போதும் விளையாட்டை சிந்தனையோடும், இதயத்தோடும் தொடர்புபடுத்தி பார்க்கக் கூடியவர். கேப்டனாக அவர் பெற்ற வெற்றிகள் அவர் எடுத்த முடிவுகளால் மட்டும் கிடைத்ததல்ல, சக வீரர்களின் மேல் வைத்த நம்பிக்கையும் காரணம். நம்பர் 7 ஜெர்சிக்காரருக்கு இது சிறப்பான தினம், நீங்கள் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தியதற்கு நன்றி" என தெரிவித்து இருக்கிறார்.
ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் "ஒரு நல்ல மனிதன் எப்படி இருக்க வேண்டுமென எனக்கு கற்றுத்தந்தவர். என்னுடைய கடுமையான காலக்கட்டத்தில் துணையாக நின்றவர், பிறந்தநாள் வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார். சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "நீங்கள் ஒரு மிகச் சிறந்த மனிதர், பிறந்தநாள் வாழ்த்துகள் கடவுளின் ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்கும்" என பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பதிவில் "மஹி அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்" என கூறியுள்ளார். இதேபோல முன்னாள் வீரர்கள் விவிஎஸ் லட்சுமணன், இந்திய வீரர் கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் ஹர்மண்ப்ரீத் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் வாழ்த்துகளை தோனிக்கு தெரிவித்து வருகின்றனர்.