ஆஸ்திரேலிய ஓப்பன் 2024: அடுத்தடுத்து வெளியேறும் முன்னணி வீராங்கனைகள்!

இந்த அதிர்ச்சிக்குள்ளிருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் 3ம் நிலை வீராங்கனை எலீனா ரிபாகினாவும் தோற்றார்.
Caroline Garcia
Caroline GarciaAsanka Brendon Ratnayake

2024 ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடர் முதல் வாரத்திலேயே பல அதிர்ச்சிகரமான முடிவுகளை கண்டிருக்கிறது. எலீனா ரிபாகினா, ஆன்ஸ் ஜபோர், ஜெஸ்ஸிகா பெகுலா போன்ற முன்னணி வீராங்கனைகள் பலரும் மூன்றாம் சுற்றுக்கே முன்னேறாமல் வெளியேறியிருக்கிறார்கள். ஆண்கள் பிரிவிலும் முன்னணி வீரர்கள் போராடியே அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய ஓப்பன் 2024 தொடர் கடந்த ஜனவரி 14ம் தேதி தொடங்கியது. குழந்தை பெற்றதினால் டென்னிஸிலிருந்து விலகியிருந்த கிராண்ட் ஸ்லாம் வின்னர் நயோமி ஒசாகா, ஆஸ்திரேலியன் ஓப்பன் தொடருக்குத் திரும்பினார். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் கண்ட அவர், முதல் சுற்றில் பிரான்ஸின் நயோமி ஒசாகா உடன் மோதினார். கடுமையாகப் போராடிய ஒசாகா, 6-4, 7-6 (7-2) என தோல்வி அடைந்தார். இந்தப் போட்டிக்குப் பின்பு பேசிய ஒசாகா, "நான் இதை பாசிடிவாகவே பார்க்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு நான் குழந்தை பெற்றெடுத்திருக்கிறேன். உடனே களத்துக்கு வந்தவுடன் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது மிகவும் தவறு. என்னை நானே அரவணைப்பது முக்கியம் என்று நினைக்கிறேன்" எனக் கூறினார் ஒசாகா. ஒசாகா வெற்றி பெறாவிட்டாலும், அவர் பிரசவத்துக்குப் பிறகு மீண்டும் களத்துக்குத் திரும்பியிருப்பது பலருக்கும் உத்வேகம் கொடுக்கும், முன்னுதாரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஒசாகாவை முதல் சுற்றில் வீசியிருந்த கரோலின் கார்சியா இரண்டாவது சுற்றில் மேக்தலின் ஃபிரெக் உடன் தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

ஒசாகாவின் கம்பேக் போல எம்மா ரடுகானுவின் கம்பேக்கும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. முன்னால் அமெரிக்க ஓப்பன் சாம்பியன் நெடுங்காலமாக காயத்தால் அவதிப்பட்டுவந்தார். முதல் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு அமெரிக்க வீராங்கனை ஷெல்பி ரோஜர்ஸை நேர் செட்களில் தோற்கடித்தார் அவர். ஆனால் இரண்டாவது சுற்றில் அவர் சீன வீராங்கனை வாங் யஃபானிடம் 4-6, 6-4, 4-6 என்று தோல்வியடைந்தார்.

இந்த இரண்டாவது சுற்றில் இதுபோல் பல முன்னணி வீராங்கனைகள் தோற்று வெளியேறினார்கள். எம்மா ரடுகானு அமெரிக்க ஓப்பனில் வென்றபோது, அவரிடம் தோற்ற லெய்லா ஃபெர்னாண்டஸ் 7-5, 6-4 என அலீசியா பார்க்ஸிடம் தோற்றார். எட்டாவது ரேங்கில் இருக்கும் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 4-6, 4-6 என நேர் செட்களில் எலினா அவேனெஸ்யானிடம் தோற்று வெளியேறினார். தன் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கும் 6ம் நிலை வீராங்கனை ஆன்ஸ் ஜபோர் மிரா அண்ட்ரீவாவிடம் 0-6, 2-6 என தோல்வியடைந்தார்.

இந்த அதிர்ச்சிக்குள்ளிருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் 3ம் நிலை வீராங்கனை எலீனா ரிபாகினாவும் தோற்றார். ஆனா பிலிங்கோவாவுடன் மோதிய அவர் 4-6, 6-4, 6-7 (20-22) என கடைசி செட்டில் போராடி வீழ்ந்தார். அந்த கடைசி செட் டை பிரேக்கர் முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்க, 20-22 வரை சென்றது. பெண்கள் கிராண்ட் ஸ்லாம் வரலாற்றில் இதுவே மிகப் பெரிய டை பிரேக்கராகவும் அமைந்தது. இவர்கள் போக ஜெஸ்ஸிகா பெகுலா, டரியா கசட்கினா போன்ற முன்னணி வீராங்கனைகளும் தங்களை விட பல இடங்கள் பின்தங்கியிருக்கும் வீராங்கனைகளிடம் தோற்று வெளியேறினார்கள். முதல் நிலை வீராங்கனை இகா ஸ்வியாடெக் கூட தோற்றிருப்பார். டேனியல் காலின்ஸுக்கு எதிரான இரண்டாவது சுற்றுப் போட்டியில் மூன்றாவது சுற்றில் போராடி வென்றார் அவர். அதேசமயம், அரீனா சபலென்கா, கோகோ காஃப் ஆகியோர் மூன்றாவது சுற்றிலும் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்கள்.

ஆண்கள் பிரிவில் இப்படி தொடர் அதிர்ச்சிகள் ஏற்படவில்லை. ஃபிரான்சிஸ் டியாஃபோ, ஹோல்கர் ரூன் ஆகியோர் இரண்டாவது சுற்றில் தோற்றது மட்டும் சற்று அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. டேனி மெத்வதேவ் கூட தோல்வியை கிட்டத்தட்ட நெருங்கியிருந்தார். எமில் ருஸுவோரிக்கு எதிரான போட்டியில் முதலிரு செட்களையும் தோற்றிருந்தாலும், அடுத்த 3 செட்களையும் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் அவர்.

இந்திய வீரர் சுமித் நகல் தன் முதல் சுற்றிப் போட்டியில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். தரநிலையில் 31ம் நிலையில் இருக்கும் அலெக்சாண்டர் புப்லிக் உடன் மோதிய நகல், 6-4, 6-2, 7-6 (7-5) என நேர் செட்களில் வெற்றி பெற்று அசத்தினார். இரண்டாவது சுற்றையும் சிறப்பாகத் தொடங்கிய அவர், சீன வீரர் ஷான் ஜெங்செங்குக்கு எதிராக முதல் செட்டை வென்றார். ஆனால், அடுத்த மூன்று செட்களையும் இழந்து தொடரிலிருந்து வெளியேறினார் அவர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com