குல்தீப் சுழலில் வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா: தொடரை வென்றது இந்திய அணி
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல்முறையாக ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றி, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
போர்ட்எலிசெபத் நகரில் நடைபெற்ற 5வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் ஏய்டன் மார்க்ராம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷிகர் தவான், ரோஹித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஷிகர் தவான் 34 ரன்னிலும், கேப்டன் விராட் கோலி 36 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் இந்திய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். எனினும், நிலைத்து நின்று ஆடிய ரோஹித் சர்மா 104 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 115 ரன்னில் ஆட்டமிழந்தார்.
275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள், இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்க்கொள்ள முடியாமல் திணறினர். அந்த அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தென்னாப்பிரிக்கா அணியில் அதிகப்பட்சமாக தொடக்க வீரர் அம்லா 71 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும், சாஹால், பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல்முறையாக ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.