பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றது.
உலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டி இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 104 (92), கே.எல்.ராகுல் 77 (92) மற்றும் ரிஷாப் பண்ட் 48 (41) ரன்கள் எடுத்தனர். பங்களாதேஷ் அணியில் முஸ்தஃபிஸுர் ரகுமான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. பின்னர் சீரான இடை வெளியில் விக்கெட்டுகளை இழந்த பங்களாதேஷ் அணி, 48 ஓவரில் 286 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 13 புள்ளிகளை எட்டி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.