ஹாக்கி வீராங்கனை, ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹாக்கி வீராங்கனை ஜோதி குப்தா (20). மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டுள்ள இவர், அடுத்த வாரம் பெங்களூரில் நடக்கும் பயிற்சியில் கலந்துகொள்ள இருந்தார்.
இவர் நேற்று முன்தினம், ’சர்டிபிகேட்டில் என் பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கிறது. அதை திருத்துவதற்காக ரோட்டாக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறேன்’ என்று வீட்டில் கூறிவிட்டு சென்றார். மாலையில் பெற்றோரை போனில் தொடர்பு கொண்ட ஜோதி, ’நான் வந்த பேரூந்து உடைந்துவிட்டது. விரைவில் வீட்டுக்கு வந்துவிடுவேன்’ என்று சொன்னார். ஆனால் அவர் வரவில்லை.
இந்நிலையில் அவரது உடல் ரேவரி ரயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று கண்டெடுக்கப்பட்டது. அவரது மொபைல் போனும் அங்கு கிடந்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டுக்குத் தகவல் தெரிவித்தனர்.
சண்டிகர்-ஜெய்பூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர் கூறும்போது, ஜோதி ரயில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என்றும் அப்போது ரயிலை நிறுத்த முயற்சி செய்ததாகவும் ஆனாலும் ரயில் அவர் மோதி விட்டதும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், ஜோதி தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.