‘வெள்ளி’வீரர் தருணுக்கு தமிழக அரசு 30 லட்சம் பரிசு
இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள தமிழக வீரர் தருண் அய்யாச்சாமிக்கு 30 லட்ச ரூபாய் ஊக்க தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் தருண் அய்யாச்சாமிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு போட்டிகளிலும் தங்கம் வென்று தமிழகத்துக்கு தருண் பெருமை சேர்த்தது கடிதத்தில் நினைவு கூறப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஊக்கத்தொகையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு அறிவித்ததை சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், அதன்படி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள தருணுக்கு 30 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அவரின் வெற்றிக்கு பெருந்துணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ள முதல்வர், எதிர்கால வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆசிய விளையாட்டு போட்டியில், தமிழகத்தை சேர்ந்த சவரவ் கோஷல், தீபிகா கார்த்திக், ஜோஸ்னா சின்னப்பா ஆகிய ஸ்குவாஷ் வீரர்-வீராங்கனைகள் வெண்கலப்பதக்கம் வென்றனர். வெண்கலம் வென்ற மூவருக்கும் தலா ரூ.20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.