ஐபிஎல் தொகையைவிட TNPL-இல் அதிக விலைக்குப் போன சென்னை வீரர்!

ஐபிஎல் தொகையைவிட TNPL-இல் அதிக விலைக்குப் போன சென்னை வீரர்!
ஐபிஎல் தொகையைவிட TNPL-இல் அதிக விலைக்குப் போன சென்னை வீரர்!

ஐபிஎல் ஏலத்தில்கூட, குஜராத் டைட்டன்ஸ் அணியால் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர் சாய் சுதர்சன், டிஎன்பிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7வது சீசன், இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஏலம் இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்கியது. அதன்படி, முதல் வீரராக ஏலம் விடப்பட்ட ஆல்ரவுண்டர் விஜய் சங்கரை ரூ.10.25 லட்சத்திற்கு திருப்பூர் அணி வாங்கியது. அதேநேரத்தில், அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சாய் சுதர்சனை திண்டுக்கல் டிராகன்ஸுடன் போட்டி போட்டு ரூ.21.6 லட்சம் கொடுத்து லைகா கோவை கிங்ஸ் அணி வாங்கியது. இதன்மூலம், தமிழ்நாடு பிரீமியர் லீக் வரலாற்று உச்சபட்ச தொகைக்கு விலைபோன வீரர் என்ற சாதனையை சாய் சுதர்சன் படைத்தார்.

ஐபிஎல் ஏலத்தில்கூட, குஜராத் டைட்டன்ஸ் அணியால் அவர் 20 லட்சம் ரூபாய்க்குத்தான் ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு கிரிக்கெட்டில் ரஞ்சி, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி என 3 விதமான ஃபார்மட்டிலும் அபாரமாக ஆடி தமிழ்நாடு அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி மேட்ச் வின்னராக திகழ்ந்துவருகிறார் சாய் சுதர்சன். ஐபிஎல்லிலும் கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக முதல்முறையாக களமிறங்கி, அறிமுக சீசனில் கோப்பையை வென்று தர உதவினார்.

அதுபோல், இந்த ஏலத்தில் சுதர்சனுக்கு அடுத்து அதிக விலைக்கு எடுக்கப்பட்டவர், ஆல்ரவுண்டரான சஞ்சய் யாதவ். இவரை, ரூ.17.6 லட்சம் தொகைக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வாங்கியுள்ளது. இவருக்கு அடுத்து, வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவை ரூ.15.2 லட்சத்திற்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. தொடர்ந்து சந்தீப் வாரியரை ரூ.8.25 லட்சத்துக்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தரை ரூ.6.75 லட்சத்திற்கு மதுரை பாந்தர்ஸ் அணியும், வருண் சக்கரவர்த்தியை அதே தொகைக்கு திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், நடராஜனை ரூ.6.25 லட்சத்திற்கு ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வாங்கியுள்ளன.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com