விஜய் ஹசாரே கோப்பை: 5வது முறையாக தமிழக அணி சாம்பியன்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் மேற்கு வங்க அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி வீழ்த்தியது.
டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நிலைத்து நின்று விளையாடிய தினேஷ் கார்த்திக் 112 ரன்கள் எடுத்தார். மேற்கு வங்க அணி சார்பில் முஹமது ஷமி 4 விக்கெட்டுகளும், அஷோக் திண்டா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். பின்னர் 218 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய மேற்குவங்க அணி தமிழக அணியின் சிறப்பான பந்துவீச்சால் ரன் எடுக்க முடியாமல் திணறியது. அந்த அணி 46-வது ஓவரிலேயே 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சுதீப் சேட்டர்ஜி 58 ரன்கள் எடுத்தார். தமிழக அணி தரப்பில் முஹமது, அஷ்வின் கிறிஸ்ட், ராஹில் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழக அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.