“ அன்று சச்சின், தோனி, கோலி… இப்போ நடராஜன்” -பாராட்டிய நடிகர் சதீஷ்!
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன் இப்போது சர்வதேச கிரிக்கெட் வீரராக கிரிக்கெட் உலகை அசத்தி வருகிறார். ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு வீரர்களையே தனது பந்து வீச்சினால் திக்குமுக்காட செய்து வருகிறார் நடராஜன். அவரை பலரும் வாழ்த்திய வண்ணம் உள்ளனர். விரைவில் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியிலும் நடராஜன் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
இந்நிலையில் அவரை தமிழ் திரை உலகின் நகைச்சுவை நடிகர் சதீஷ் வாழ்த்தியுள்ளார். தற்போது அவர் நடித்து வரும் ஒரு திரைப்படத்தின் போட்டோவை ட்விட்டரில் பகிர்ந்து அதன் மூலம் நடராஜனை அவர் வாழ்த்தியுள்ளார்.
“காலம் காலமாக தமிழ் சினிமாவின் கல்லூரி விடுதி காட்சிகளில் அந்த இடத்தை சச்சின், தோனி, கோலி மாதிரியான வீரர்கள் அலங்கரித்ததை பார்த்திருப்போம். இப்போது அந்த இடத்தை நம்ம ஊரை சேர்ந்த நடராஜனை அலங்கரிக்கிறார். உனது வளர்ச்சியை பார்க்கும் போது பெருமையாக உள்ளது நடராஜன்” என அந்த ட்வீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நடிகர் சதிஷ், நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ப்ரியா பவானி ஷங்கரின் படத்தில் நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.