’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ மிரட்டல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி!
உலகக்கோப்பை கிரிக்கெட்டில், ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்க அணி.
இங்கிலாந்தின் கார்டிப்பில் நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால், 48 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக, ரஷித் கான் 25 பந்தில் 35 ரன்னும், நூர் அலி சாட்ரன் 32 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.
தென்னாப்பிரிக்க தரப்பில் ’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டும் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டும் பெலுக்வாயா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ரபாடாவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.
பின்னர் 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் அம்லாவும் டிகாக்கும் பொறுமையாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அந்த அணி 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
டி காக், 68 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அம்லா 41 ரன்னும் பெலுக்வாயா 17 ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
4 விக்கெட் வீழ்த்திய இம்ரான் தாஹிர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம், நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது தென்னாப்பிரிக்கா அணி.