ஆர்சிபி அணியில் இணையும் ஜிம்பாப்வே வேகப்பந்துவீச்சாளர் முசரபானி.. வெளியேறும் நட்சத்திர பவுலர்!
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரானது பாதியில் நிறுத்தப்பட்டு ஒருவாரம் தள்ளிப்போனது. இதனால் ஐபிஎல்லில் ஒரு பங்காக இருந்த பல வெளிநாட்டு வீரர்கள், தங்களுடைய நாட்டிற்காக விளையாடுவதற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதனால் பல வீரர்கள் ஐபிஎல் அணிகளுக்கு கிடைக்கமாட்டார்கள் என்பதால், ஐபிஎல் அணிகள் மீதமிருக்கும் போட்டிகளுக்கு தற்காலிக மாற்றுவீரர்களை இணைத்துக்கொள்ளலாம் என்றும், தற்போது இணைக்கப்படும் வீரர்கள் 2026 ஐபிஎல்லில் தக்கவைக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அனைத்து அணிகளுக்கும் நல்ல செய்தியாக மாறிய நிலையில், ஒவ்வொரு அணியும் அவர்களுக்கான தற்காலிக மாற்றுவீரர்களை அணியில் இணைத்து வருகின்றனர்.
ஆர்சிபி அணியில் இணையும் ஜிம்பாப்வே பவுலர்..
2025 ஐபிஎல் தொடரின் 3 பிளேஆஃப் இடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குள் காலடி வைத்துள்ளன.
இந்த சூழலில் மீதமிருக்கும் 2 போட்டிகளில் வென்று முதலிரண்டு இடத்தை பிடிப்பதில் ஆர்சிபி ஆர்வம் காட்டிவரும் நிலையில், அவர்களின் முக்கிய வீரர்களான ஹசல்வுட், படிக்கல்லை தொடர்ந்து தற்போது லுங்கி இங்கிடியும் மீதமிருக்கும் போட்டிகளை தவறவிட உள்ளனர்.
ஏற்கனவே படிக்கல்லுக்கு மாற்றாக அகர்வால் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது லுங்கி இங்கிடிக்கு மாற்றாக ஜிம்பாப்வே வேகப்பந்துவீச்சாளர் பிளெசிங் முசரபானியை இணைத்துள்ளனர். நல்ல உயரத்துடன் அதிகவேகத்தில் சிறந்த லைன் மற்றும் லெந்தை வீசும் முசரபானி, ஹசல்வுட் மற்றும் லுங்கி இங்கிடி இல்லாத சூழலில் நல்ல மாற்றாக இருப்பார் என ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முசரபானி ஐபிஎல் அறிமுகத்தை பெற்றதில்லை என்றாலும், தற்போது ஆர்சிபியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளெவர் லக்னோ அணியில் பணியாற்றிய போது நெட் பௌலராக முசரபானி கவனம் ஈர்த்துள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் சர்வதேச டி20 லீக்கில் சிறப்பாக செயல்பட்டுள்ள முசரபானி, ஜிம்பாப்வேவின் நட்சத்திர பவுலராக வலம்வருகிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயிற்சிக்காக செல்லும் லுங்கி இங்கிடி மற்றும் ஹசல்வுட் இருவரும் பிளேஆஃப் போட்டிகளுக்கு ஆர்சிபி அணிக்கு திரும்பி விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.