”சுழலில் சூறாவளி”.. சென்னை அணி வீரரின் சாதனையைத் தகர்த்த யுஸ்வேந்திர சாஹல்!

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த யுஸ்வேந்திர சாஹல், அதிக விக்கெட்களைக் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.
யுஸ்வேந்திர சாஹல்
யுஸ்வேந்திர சாஹல்rr twitter page

இளம் வீரர்கள் பலர் உருவாவதற்குக் களம் அமைத்துக் கொடுக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் எண்ணற்ற வீரர்களும், எண்ணிலடங்கா சாதனைகளும் படைக்கப்பட்டு வருகின்றன என்பது எல்லோரும் அறிந்ததே. அந்த வகையில், நடப்பு ஐபில் தொடரில் இன்று ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட்டின் 16வது சீசன், தற்போது அடுத்தகட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரின் 56வது போட்டி, இன்று (மே 11) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் அணி, கொல்கத்தாவை பேட் செய்ய பணித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 57 ரன்கள் எடுத்தார்.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருக்கும் யுஸ்வேந்திர சாஹல், ஐபிஎல்லில் புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளார். அவர், இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபில் தொடரில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்தார். இதற்கு முன்பு சென்னை அணியில் இடம்பெற்றிருந்த மேற்கிந்திய தீவு அணியைச் சேர்ந்த பிராவோ 183 விக்கெட்கள் எடுத்து முதல் இடத்தில் இருந்தார். அந்தச் சாதனையை ஜெய்ப்பூரில், கடந்த மே 7ஆம் தேதி நடைபெற்ற 52வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 4 விக்கெட்கள் எடுத்து சமன் செய்திருந்த சாஹல், இன்றைய போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்தி டுவைன் பிராவோவை 2வது இடத்திற்குத் தள்ளினார். பிராவோ 161 போட்டிகளில் எடுத்த இந்தச் சாதனையை, சாஹல் 143 போட்டிகளில் எடுத்துள்ளார். அதேநேரத்தில், பிராவோ தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் பியூஸ் சாவ்லா (174), அமித் மிஸ்ரா (172), ரவிச்சந்திரன் அஸ்வின் (171) ஆகியோர் உள்ளனர்.

மேலும், இன்றைய போட்டியில் 4 ஓவர்களை வீசி 25 ரன்களை வழங்கி 4 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஐபிஎல்லில் அதிக விக்கெட்களை (187) வீழ்த்தியுள்ளார். தவிர, டெத் ஓவர்களில் (16-20) அதிக விக்கெட்களை (11) வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் சாஹல் 2வது இடம்பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் சென்னை அணி வீரர் பதிரானா 12 விக்கெட்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

2013ஆம் ஆண்டு முதல் ஐபில் தொடரில் விளையாடி வரும் சாஹல், மும்பை, பெங்களூரு ஆகிய அணிகளிலும் இடம்பெற்று விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com