
உலக கிரிக்கெட் வரலாற்றில் முறியடிக்கப்பட முடியாத சாதனைகள் என, பல அரிய சாதனைகள் இருந்துவருகின்றன. அதில் அதிக ரன்கள், குறைவான பந்துகளில் சதங்கள், அரைசதங்கள் என பல இருந்தாலும், இந்திய ரசிகர்களை பொறுத்தவரையில் எந்த சாதனை முறியடிக்கப்பட முடியாத சாதனை என்று கேட்டால், முதலில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்களை சொல்லும் அனைவரும், அடுத்து யுவராஜ் சிங் அடித்த 12 பந்துகளில் அரைசதம் என்ற சாதனையை தான் கூறுவார்கள்.
அந்த வகையில் யுவராஜ் சிங் படைத்த அந்த சாதனை, இந்திய ரசிகர்களின் நெஞ்சில் புத்திணர்ச்சியோடு இன்னும் அப்படியே இருந்துவருகிறது.
யுவராஜ் சிங்கின் அதிவேக அரைசதமானது, சர்வதேச கிரிக்கெட்டில் முறியடிக்கப்படவே முடியாத ஒன்றாக இருந்தாலும், டி20 லீக் போட்டிகளில் முறியடிக்க முயன்று தோற்றுப்போயுள்ளனர். அந்த பட்டியலில் கிறிஸ் கெய்ல் மற்றும் ஷசாய் போன்ற வீரர்கள் இருக்கின்றனர். அதிவேக சதமடிக்க முயன்ற அவர்கள், அதுமுடியாமல் 12 பந்துகளிலேயே அரைசதம் அடித்து சமன் செய்துள்ளனர். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில், இன்னும் அந்த சாதனையை யாராலும் சமன் கூட செய்யமுடியவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் தொடரிலாவது யாராவது முறியடிப்பார்களா என்ற நினைத்த போதெல்லாம், ஐபிஎல்லின் அதிவேக அரைசதமானது 14 பந்துகள், 15 பந்துகளில் மட்டுமே வந்துள்ளது. கேஎல் ராகுல் மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர்.
இன்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், யுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடிக்கும் முயற்சியில் இறங்கினார், 21 வயதேயான யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
முதல் ஓவரை நிதிஸ் ரானா வீச, முதலிரண்டு பந்துகளை சிக்சர்களுக்கு பறக்கவிட்ட ஜெய்ஸ்வால், அடுத்த இரண்டு பந்துகளில் பவுண்டரிகளை விரட்டினார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடிக்கப்பட்ட முதல் ஓவராக மாறும் என்று எதிர்ப்பார்க்கையில், அடுத்த பந்தில் 2 ரன்னும், கடைசி பந்தில் ஒரு பவுண்டரியை அடிக்க, 26 ரன்னை எடுத்துவந்தார் ஜெய்ஸ்வால். இதற்கு முன் முதல் ஓவரில் 27 ரன்கள் அடிக்கப்பட்டிருக்க, 2 ரன்னில் அந்த சாதனை தவறிப்போனது. ஆனால் முந்தைய 27 ரன்கள் சாதனையில் 7 எக்ஸ்ட்ராஸ் வீசப்பட்டிருப்பதால், எக்ஸ்ட்ராஸ் இல்லாமலேயே அதிக ரன்களை அடித்த பெருமை ஜெய்ஸ்வாலுக்கே சேர்ந்துள்ளது.
அடுத்த ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி என பறக்கவிட, யுவராஜ் சிங் சாதனையை முறியடிப்பார் என்ற எண்ணம் தகர்ந்தது. மாறாக 9 பந்துகளில் 37 ரன்களை சேர்த்திருந்தார் யஷஸ்வி. அடுத்த 3 பந்துகளில், 2 சிக்சர்களை அடித்தாலே யுவராஜ் சாதனையை சமன் செய்துவிடலாம். அந்த முயற்சியில் ஜெய்ஸ்வால் இறங்கினாலும், அவரால் தொடர்ந்து 3 பந்துகளில் 3 பவுண்டரிகளையே விரட்ட முடிந்தது. இதனால் 2 பந்தில் யுவராஜ் சிங்கின் சாதனை தவறிப்போனது. அதிரடியின் பலனாய் 13 பந்துகளில் 50 ரன்னை அடித்து அசத்தினார் ஜெய்ஸ்வால்.
இதற்கு முன்பு வரை ஐபிஎல்லில், 14 பந்துகளில் அடிக்கப்பட்டது தான் அதிவேக அரைசதமாக இருந்துவந்த நிலையில், அதை முறியடித்து 13 பந்துகளில் அரைசதமடித்து, புதியசாதனையை படைத்திருக்கிறார் ஜெய்ஸ்வால்.