”இதுநடந்தால் அர்ஜுன் டெண்டுல்கர் அடுத்த கிறிஸ் கெய்ல் ஆக மாறுவார்” - யுவராஜ் தந்தை கொடுக்கும் ஐடியா!
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். இவர், தற்போது ஐபிஎல் 2025இல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். எனினும், இந்த சீசனில் அவர் ஓர் ஆட்டத்தில்கூட விளையாடவில்லை. மறுபுறம், அவர் ரஞ்சி டிராபியில் மும்பை அணியில் இருந்து விலகி, கோவா அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்த நிலையில், அவருடைய ஆட்டத்திறன் குறித்து பேசிய யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங், “எனது மகனிடம் பயிற்சி எடுத்துக்கொண்டு அவருடைய பேட்டிங் திறமையை மேம்படுத்த முடிவு செய்தால், அர்ஜுன் சர்வதேச கிரிக்கெட்டின் அடுத்த கிறிஸ் கெய்ல் ஆக முடியும். அர்ஜுனைப் பொறுத்தவரை, அவரது பந்துவீச்சில் கவனம் செலுத்துவதைக் குறைத்து, பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சச்சினின் மகனை மூன்று மாதங்களுக்கு தனது பயிற்சியின்கீழ் யுவராஜ் வைத்திருந்தால், அவர் அடுத்த கிறிஸ் கெய்லாக மாறுவார் என்று நான் பந்தயம் கட்டுகிறேன். ஒரு வேகப்பந்து வீச்சாளர், மன அழுத்த முறிவுக்கு ஆளானால், அவ்வளவு திறம்பட பந்து வீச முடியாது. அர்ஜுனை சிறிது காலம் யுவராஜிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் (PCA) நடத்திய பல்வேறு வயதுக்குட்பட்ட போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டர் அபிஷேக் சர்மாவின் திறமையை தனது மகன் முதன்முதலில் கண்டுபிடித்ததாக யோகராஜ் சிங் தெரிவித்தார். யுவராஜ், பிசிஏவிடம் அபிஷேக்கின் புள்ளிவிவரங்களைக் கேட்டபோது, அவர்கள் அவரை ஒரு பந்துவீச்சாளராகப் பட்டியலிட்டிருந்தனர். நாங்கள் அவரது சாதனையைப் பார்த்தபோது, அவர் ஏற்கெனவே 24 சதங்கள் அடித்திருந்தது தெரிய வந்தது என்றார். அபிஷேக் ஷர்மாவை மாற்றியதுபோல் அர்ஜுன் டெண்டுல்கரையும் மாற்ற முடியும் என்று யோகராஜ் சிங் நம்பிக்கை தெரிவிக்கின்றார்.