WPL 2024 | கடந்த ஆண்டு தவறவிட்டதை இந்த முறை அடையுமா டெல்லி கேபிடல்ஸ்..!

அந்த அணியின் மிகப் பெரிய பலம் அவர்களின் கேப்டன் மெக் லேனிங். ஆஸ்திரேலிய அணிக்காக 6 உலகக் கோப்பைகளை கேப்டனாக வென்ற வித்தகர்.
delhi capitals
delhi capitals delhi capitals

வுமன்ஸ் பிரீமியர் லீக் (WPL) தொடரின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ம் தேதி தொடங்குகிறது. 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூர் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் எப்படி இருக்கிறது. அதன் பலம், பலவீனம் என்னென்ன? ஓர் அலசல். இந்த எபிசோடில் டெல்லி கேபிடல்ஸ்.

WPL 2023 செயல்பாடு

கடந்த WPL தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட டெல்லி கேபிடல்ஸ் குரூப் சுற்றில் முதலிடம் பிடித்தது. விளையடிய 8 போட்டிகளில் ஆறை வென்ற அந்த அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆனால் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் போராடி தோற்றது. அந்த அணிக்காக பல வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் கேப்டன் மெக் லேனிங் 354 ரன்கள் குவித்து இத்தொடரின் முதல் ஆரஞ்ச் கேப்பை தனதாக்கினார். அவரோடு ஓப்பனராக இறங்கிய இளம் இந்திய வீராங்கனை ஷஃபாலி வெர்மாவும் 252 ரன்கள் விளாசினார். பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷிகா பாண்டே 10 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆல்ரவுண்டராக அசத்திய மரிசான் காப் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு 177 ரன்கள் விளாசினார்.

2024 ஏலத்தில்...

2024 WPL ஏலத்துக்கு முன்பாக அந்த அணி 3 வீரர்களை ரிலீஸ் செய்தது. இந்திய வீராங்கனைகள் அபர்னா மொண்டல், ஜஸிதா அக்தர் ஆகியோரை ரிலீஸ் செய்தவர்கள், வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் தாரா நாரிஸையும் சேர்ந்தே ரிலீஸ் செய்தனர். அசோசியேட் அணியைச் சேர்ந்தவரான தாரா நாரிஸை ஐந்தாவது வேகப்பந்துவீச்சாளராக அவர்கள் பிளேயிங் லெவனில் ஆட வைத்திருக்க முடியும். அதனால் அவரை ரிலீஸ் செய்தது சற்று ஆச்சர்யமளிப்பதாகவே இருந்தது. அதேசமயம், அந்த இடத்துக்கு ஒரு மிகப் பெரிய அப்கிரேட் செய்திருக்கிறது அந்த அணி. இந்த ஏலத்தில் 2 கோடி ரூபாய்க்கு ஆஸ்திரேலிய இளம் ஆல்ரவுண்டர் ஆனபெல் சதர்லேண்டை வாங்கியிருக்கிறது. விக்கெட் கீப்பர் இடத்துக்கு அபர்னா மொண்டலை மீண்டும் வாங்கியவர்கள், ஆல்ரவுண்டர் அஷ்வனி குமாரியையும் அடிப்படை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்.

பலம்

அந்த அணியின் மிகப் பெரிய பலம் அவர்களின் கேப்டன் மெக் லேனிங். ஆஸ்திரேலிய அணிக்காக 6 உலகக் கோப்பைகளை கேப்டனாக வென்ற வித்தகர். இப்போது சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்று முழுக்க டி20 லீகுகளில் மட்டுமே பங்கேற்கப்போகிறார். அதனால், இந்தத் தொடரை வென்றுவிடவேண்டும் என்பது அவரது மிகப் பெரிய அஜண்டாவாக இருக்கும். இந்திய இளம் நட்சத்திரம் ஜெமீமா ராட்ரிக்ஸ் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அது மிடில் ஆர்டருக்கு பெரும் நம்பிக்கை கொடுக்கும். மரிசான் காப், ஆனபெல் சதர்லேண்ட் என போட்டியை மாற்றக்கூடிய இரண்டு உலகத் தர ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். போக, ஷிகா பாண்டே, திதாஸ் சாது, ராதா யாதவ், பூனம் யாதவ், அருந்ததி ரெட்டி என அனுபவம் நிறைந்த இந்திய பௌலிங் யூனிட் விக்கெட் வேட்டை நடத்தக் காத்திருக்கிறது.

பலவீனம்

கடந்த முறை அசத்தலாக ஆடிய அந்த அணியின் இந்திய நட்சத்திரம் ஷஃபாலி வெர்மா இப்போது நல்ல ஃபார்மில் இல்லை. தொடர்ந்து சோபிக்கத் தவறிய அவரை இந்திய அணியே பெஞ்சில் அமர்த்தியது. அவர் இந்தத் தொடரில் மீண்டு வரவேண்டும். அதுபோக, விக்கெட் கீப்பர் தானியா பாடியா பேட்டிங்கில் பெரிதாக பங்களிக்கக்கூடியவர் அல்ல. பேக் அப் ஆப்ஷனாக இருக்கும் அபர்னா மொண்டலும் கூட பேட்டிங்கில் அவ்வளவாக சோபிக்கமாட்டார். அது பிளேயிங் லெவனில் ஒரு பேட்டிங் ஆப்ஷனையே குறைத்துவிடுகிறது.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்

1. மெக் லேனிங் (கேப்டன்)
2. ஷஃபாலி வெர்மா
3. ஜெமீமா ராட்ரிக்ஸ்
4. மரிசான் காப்
5. அலீஸ் கேப்ஸி
6. ஆனபெல் சதர்லேண்ட்
7. ஷிகா பாண்டே
8. ராதா யாதவ்
9. தானியா பாடியா (விக்கெட் கீப்பர்)
10. திதாஸ் சாது
11. பூனம் யாதவ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com