முத்தரப்பு தொடர் | இந்திய மகளிர் அணி சாம்பியன்!
இந்தியா, இலங்கை, தென்னப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இலங்கையில் நடைபெற்ற இத்தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியாவும் இலங்கையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதையடுத்து, நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க வீராங்கனை 101 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் தனது 11ஆவது சதத்தை பதிவு செய்தார். தவிர, உலக மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த பட்டியலில் மூன்றாவது இடத்தையும் அவர் பிடித்தார்.
பின்னர் 343 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை 48.2 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
இந்தியா தரப்பில் ஸ்னே ராணா 4 விக்கெட்டுகளும், அமன்ஜோத் கவுர் 3 விக்கெட்களும் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர். போட்டியில் ஆட்ட நாயகன் விருதை ஸ்மிருதி மந்தனாவும், தொடர் நாயகன் விருதை 15 விக்கெட்கள் வீழ்த்திய ஸ்னே ராணாவும் பெற்றனர்.