Hardik Pandya
Hardik PandyaIPL

MI Auction Strategy | ஹர்திக் வந்தாச்சு... பந்துவீச்சையும் பலப்படுத்துமா மும்பை இந்தியன்ஸ்..?

பும்ராவோடு ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளரை அவர்கள் களமிறக்க விரும்புவார்கள். அதனால் பெரண்டார்ஃபுக்கு பேக் அப் ஆக ஒரு வீரரை வாங்க மும்பை இந்தியன்ஸ் முயற்சிப்பார்கள்.

2024 ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன் ஒவ்வொரு அணியும் எப்படி இருக்கின்றன, எந்தெந்த இடங்களில் ஓட்டை இருக்கின்றன, என்ன பேட்ச் வொர்க் செய்ய வேண்டும்; அணி நிர்வாகங்கள் யாரை வாங்க முயற்சிக்கும்... ஓர் அலசல். முதலில் - ஐந்து முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்

டிரேட் செய்யப்பட்ட 3 வீரர்கள்

இந்த ஏலத்துக்கு முன்பாகவே மும்பை இந்தியன்ஸ் அணி ஒருசில வீரர்களை டிரேட் செய்திருக்கிறது. முதலில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரொமேரியோ ஷெபர்டை, லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணியிடமிருந்து வாங்கியிருக்கிறது. அதுவும் அவரது அடிப்படை விலையான 50 லட்ச ரூபாய்க்கு. பெரிதும் பேசப்படாத இந்த டிரேட் நிச்சயம் ஐபிஎல் தொடருக்குப் பிறகு மும்பை செய்திருக்கும் அட்டகாச பிசினஸை பாராட்ட வைக்கலாம். ஒருவேளை டிம் டேவிட் சிறப்பாக செயல்படாதபட்சத்தில் அந்த இடத்தில் ஷெபர்ட் மும்பைக்கு நல்ல செயல்பாடுகளைக் கொடுக்கலாம். கடந்த சில மாதங்களாக மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார் அவர்.

அதன்பிறகு ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டத்தையும் அதிர்ச்சியாக்கிய ஹர்திக் பாண்டியாவின் வரவு. கேமரூன் கிரீனை ராயல் சேலஞ்சர்ஸுக்கு அனுப்பிவிட்டு, அந்த இடத்தை ஹர்திக்கை வைத்து நிரப்பியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். அவர்களின் மிடில் ஆர்டர் பேட்டிங், எதிர்கால கேப்டன்சி என பல இடங்கள் அதனால் நிரப்பப்பட்டிருக்கின்றன.

ரிலீஸ் செய்த வீரர்கள்

இந்த சீசனுக்கு முன்பாக மொத்தம் 11 வீரர்களை ரிலீஸ் செய்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ். அதிலும் அவர்களின் வெளிநாட்டு ஸ்லாட்களை அப்படியே காலி செய்திருக்கிறது. ஆர்ச்சர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் யான்சன், கிறிஸ் ஜோர்டன் என பலரும் வெளியே அனுப்பப்பட்டுவிட்டனர். சந்தீப் வாரியர், ரித்திக் ஷொகீன், அர்ஷத் கான் போன்ற இந்திய பௌலர்களையும் ரிலீஸ் செய்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ்.

ஏலத்தில் என்ன தேவை? எவ்வளவு இருக்கிறது?

மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது 17 வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் அதிகபட்சமாக இன்னும் 8 இடங்களை அவர்கள் நிரப்பலாம். 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டும் இருப்பதால், இன்னும் 4 வீரர்களை வாங்கலாம். அவர்களுக்கு இன்னும் 17.75 கோடி ரூபாய் மீதமிருக்கிறது.

எந்தெந்த வீரர்களை அந்த அணி டார்கெட் செய்யும்?

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை அவர்களின் பேட்டிங் பக்காவாக இருக்கிறது. ரோஹித் ஷர்மா, இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹல் வதேரா, ஹர்திக் பாண்டியா என டாப் 6 முழுக்க இந்திய வீரர்களே நிரம்பியிருக்கிறார்கள். எல்லோருமே 14 போட்டிகளும் ஆடக்கூடிய மிரட்டலான வீரர்கள். அடுத்ததாக டிம் டேவிட்! அதனால் ஒட்டுமொத்த டாப் 7 ஸ்பாட்களுமே பக்காவாக இருக்கிறது.

பேட்டிங் சிறப்பாக இருக்கும் அந்த அணிக்கு பௌலிங் தான் சற்று பிரச்னையாக இருக்கிறது. பும்ராவைத் தவிர நம்பிக்கையான பௌலர்கள் அந்த அணியில் இல்லை. கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட ஆகாஷ் மத்வால் மட்டுமே பிளேயிங் லெவனில் ஆடக்கூடிய இன்னொரு பௌலர். வெளிநாட்டு வீரர்களில் இடது கை வேகப்பந்துவீச்சாளரான ஜேசன் பெரண்டார்ஃப் இருக்கிறார். அதனால், பிளேயிங் லெவனில் மீதமிருக்கும் 2 ஸ்லாட்களையும் வெளிநாட்டு வீரர்களை வைத்தே அந்த அணி நிரப்பலாம்.

சுழற்பந்துவீச்சு பலவீனமாக இருக்கிறது. பியூஷ் சாவ்லாவால் எத்தனை காலத்துக்கு அவர்களை மீட்க முடியும் என்று தெரியவில்லை. அதனால் ஆடம் ஜாம்பா போன்ற ஒரு ஸ்பின்னரை அந்த அணி டார்கெட் செய்யும். வேகப்பந்துவீச்சாளர்களில் கஸ் அட்கின்சன், கோட்ஸியா, கிறிஸ் வோக்ஸ் போன்ற வீரர்களை அந்த அணி டார்கெட் செய்யலாம். ஆனால் பல அணிகளும் வேகப்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யும் என்பதால், அவர்களால் போட்டியிட முடியாது. 17.75 கோடி தான் மீதமிருக்கிறது என்பதால் அந்த அணியால் பெரும் தொகை கொடுத்து எந்த வீரர்களையும் வாங்க முடியாது.

பும்ராவோடு ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளரை அவர்கள் களமிறக்க விரும்புவார்கள். அதனால் பெரண்டார்ஃபுக்கு பேக் அப் ஆக ஒரு வீரரை வாங்க முயற்சிப்பார்கள். மிட்செல் ஸ்டார்க்கை நிச்சயம் அந்த அணி டார்கெட் செய்யும். ஆனால் அவரை வாங்கும் அளவுக்கு அவர்களிடம் தொகை இல்லை என்பதால், அவர்கள் பேக் அப் ஆப்ஷனோடு திருப்திபட்டுக்கொள்ளவேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களையும் பேக் அப் ஆப்ஷனாக அவர்கள் வாங்கவேண்டியிருக்கும். கார்த்திக் தியாகி, உமேஷ் யாதவ் போன்ற வீரர்கள் அவர்களின் பட்டியலில் இருக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com