டி20 தொடரையும் கைப்பற்றுமா இந்திய பெண்கள் அணி..?

பந்துவீச்சைப் பொறுத்தவரை ஷ்ரேயாங்கா பாடில், ராதா யாதவ், ஆஷா ஷோபனா, தீப்தி ஷர்மா என அனைத்து வெரைட்டியும் கொண்ட ஒரு அதிரடியான படையே இருக்கிறது.
smriti mandhana
smriti mandhanaR Senthilkumar

தென்னாப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரின் 3 போட்டிகளையும் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா. பெங்களூருவில் அந்த 3 போட்டிகளும் நடக்க, எளிதாக தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்திய அணி. அடுத்து சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியிலும் அசத்தலாக விளையாடி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 5 சென்னையில் தொடங்குகிறது. இந்த டி20 தொடரின் 3 போட்டிகளுமே சென்னையில் தான் நடக்கின்றன.

தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை இந்தத் தொடர் அந்த அணிக்கு மிகப் பெரிய சவாலாக அமையும். ஏற்கெனவே இந்தியாவில் விளையாடிய 4 போட்டிகளிலும் (3 ஒருநாள் & 1 டெஸ்ட்) அந்த அணி தோற்றிருக்கிறது. அதுவும் பெரிய அளவு சவால் கொடுக்க முடியாமல் படுதோல்விகள் அடைந்திருக்கிறது. அதனால் நிச்சயம் அவர்கள் கம்பேக் கொடுக்க ஆசைப்படுவார்கள். ஆனால் அதற்கான வீரர்கள் அந்த அணியில் இருக்கிறார்களா என்பது மிகப் பெரிய கேள்வி. கேப்டன் லாரா வோல்வார்ட் அந்த அணிக்கு மிகப் பெரிய பலம். அவர் தாண்டி பேட்டிங்கில் மரிசான் காப் பெரிய தூணாக இருப்பார். டி20 அணியில் இடம்பெற்றிருக்கும் அனுபவ வீரர் குளோயி டிரயான் மிடில் ஆர்டருக்கு மிகப் பெரிய பலம் சேர்ப்பார். இவர்கள் தவிர்த்து அந்த அணியின் பேட்டர்களுக்கு டி20 அரங்கில் பெரிய அனுபவம் இல்லாததால், இவர்கள் மீது அதிக நெருக்கடி இருக்கும்.

அதேபோல் பந்துவீச்சும் இந்திய அணியை இங்கு பெரிதாக அச்சுறுத்தவில்லை. மரிசான் காப் தன் வேலைப்பளுவை குறைக்க ஒருநாள் & டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசவில்லை. அது அவர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது. அது டி20 தொடரிலும் தொடர்ந்தால், இந்திய டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான். இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப அவர்களின் ஸ்பின் யூனிட்டும் அவ்வளவு பலமாக இல்லை.

அதேசமயம் இந்திய அணி அதீத நம்பிக்கையோடு இந்தத் தொடரில் களமிறங்கும். தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஹர்மன்ப்ரீத்தின் அணி, அனைத்து ஏரியாவிலுமே பலமாக இருக்கிறது. பேட்டிங் வேறு லெவலில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஸ்மிரிதி மந்தனா இந்த தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான 4 இன்னிங்ஸில் 492 ரன்கள் குவித்திருக்கிறார். மூன்று இன்னிங்ஸில் சதமடித்த அவர், மற்றொரு இன்னிங்ஸிலும் 90 ரன்கள் விளாசினார். இதை கிட்டத்தட்ட 100 ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார் அவர். அப்படியிருக்கும்போது டி20 ஃபார்மட்டில் அவர் இன்னும் பன்மடங்கு அதிரடி காட்டக் காத்திருப்பார். ஷெஃபாலி வர்மாவும் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு மிகப் பெரிய பலம். ரிச்சா கோஷ், ஜெமீமா ராட்ரிக்யூஸ் ஆகியோர்களும் டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார்கள்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை ஷ்ரேயாங்கா பாடில், ராதா யாதவ், ஆஷா ஷோபனா, தீப்தி ஷர்மா என அனைத்து வெரைட்டியும் கொண்ட ஒரு அதிரடியான படையே இருக்கிறது. இவர்கள் தென்னாப்பிரிக்க பேட்டிங்குக்கு மிகப் பெரிய தலைவலியாக இருப்பார்கள். வேகப்பந்துவீச்சிலும் நல்ல ஃபார்மில் இருக்கும் அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்திரக்கர் ஆகியோர் இந்திய அணிக்கு பலம் சேர்ப்பார்கள். இளம் வீராங்கனை ஷப்னிம் ஷகீலுக்கும் இந்தத் தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. வுமன்ஸ் பிரீமியர் லீக் அரங்கில் அசத்திய அவருக்கு இந்தத் தொடரில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அவரும் ஜொலிப்பார்.

ஒட்டுமொத்தமாக, இந்திய அணி அனைத்து ஏரியாவிலும் பலமாக இருக்கிறது. அதனால் நிச்சயம் இந்திய அணி இந்தத் தொடரை வெற்றி பெறவேண்டும். அனைத்தும் சரியாக கிளிக் ஆனால் இந்த தொடரிலும் இந்தியா தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்ய வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com