Priyansh Arya
பிரியான்ஷ் ஆர்யாpt

6 பந்தில் 6 சிக்சர்கள் அடித்தவர்.. ஹிட்டிங் சென்சேஷன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா? கோலி தான் Idol!

2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய 24 வயது பிரியான்ஷ் ஆர்யா, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 23 பந்தில் 47 ரன்கள் அடித்தார்.
Published on

17 வருட ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான செயல்திறனை கொண்ட அணியாக பஞ்சாப் கிங்ஸ் நீடித்து வருகிறது.

17 சீசன்களில் 2014 ஐபிஎல்லில் ஒருமுறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது பஞ்சாப் அணி, அதை தவிர தொடக்க ஐபிஎல் சீசனான 2008-ல் அரையிறுதிப்போட்டிவரை முன்னேறியது. அதற்கு பிறகான 15 ஐபிஎல் சீசன்களில் ஒருமுறை கூட பிளே ஆஃப்க்கு கூட தகுதிபெறாமல் எதற்கு இருக்கிறோம் என்றே தெரியாத ஒரு அணியாக இருந்துவருகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்

இதுவரை பஞ்சாப் கிங்ஸ் அணியை ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன் வழிநடத்தியதே இல்லை என்ற சூழலில், 2024 ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை வழிநடத்தவிருக்கிறார். அதேபோல அணியின் தலைமை பயிற்சியாளராக சர்வதேச கிரிக்கெட்டில் கோப்பைகளை வென்றுகுவித்த ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

ricky ponting
ricky ponting

இதுவரை பார்க்காத ஒரு பஞ்சாப் கிங்ஸை உருவாக்க விரும்புவதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ள நிலையில், அதற்கேற்றார் போல் அணியில், ‘ஸ்ரேயாஸ் ஐயர், ஜோஸ் இங்கிலீஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், க்ளென் மேக்ஸ்வெல், முஷீர் கான், பிரப்சிம்ரன் சிங், நேஹல் வதேரா, ஷஷாங் சிங், மார்கோ யான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ப்ரீத் பிரார், அஸ்மதுல்லா ஓமர்சாய், விஷ்ணு வினோத், ஆரோன் ஹார்டி, லாக்கி பெர்குசன், பிரியான்ஷ் ஆர்யா’ என திறமைக்கு பஞ்சமே இல்லாமல் நிரம்பியுள்ளனர்.

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய 24 வயது இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான 24 வயது இளம்வீரர் பிரியான்ஷ் ஆர்யா, 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு 23 பந்தில் 47 ரன்கள் அடித்து அசத்தினார். பவர்பிளேவில் பிரியான்ஷின் அதிரடியான ஆட்டத்தால் 73 ரன்களை சேர்த்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. இளம் வயதில் தைரியமான கிரிக்கெட் ஆடும் பிரியான்ஷ் ஆர்யா எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

priyansh arya
priyansh arya

டெல்லியைச் சேர்ந்த பிரியான்ஷ் ஆர்யா, 2024 டெல்லி பிரீமியர் லீக் (DPL) தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தால் கிரிக்கெட் உலகை திரும்பிப்பார்க்கவைத்தார். அங்கு 10 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், 198.69 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 67.55 சராசரியில் 608 ரன்களை குவித்து மிரட்டிவிட்டார். அதில் 2 சதங்களுடம் அடங்கும்.

ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்!

இந்த நம்பமுடியாத சாதனை போதாது என்றால், சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய ஆர்யா, வடக்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் பந்து வீச்சாளர் மனன் பரத்வாஜுக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்டு தன்னுடைய ஹிட்டிங் திறமையை நிரூபித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சையத் முஷ்டாக் அலி டிராபியையும் விட்டுவைக்காத பிரியான்ஷ், அங்கு 176.63 ஸ்ட்ரைக் ரேட்டில் 325 ரன்களுடன் டெல்லியின் அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்தார். 

விராட் கோலி ஐடல்:

விராட் கோலியை வழிகாட்டியாக கொண்டிருக்கும் பிரியான்ஷ் ஆர்யா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக விளையாட விரும்புவதாக முன்னர் கூறியிருந்தார். அதற்கேற்றார் போல் ஆர்சிபி அணியில் ஏலத்தில் அவரை எடுக்க முயற்சி செய்தது. ஆனால் இறுதியில், PBKS அவருடைய திறமைக்காக 30 லட்ச ரூபாய் அடிப்படை விலையிலிருந்து 3.8 கோடி ரூபாய் வரை சென்று அவரை அணியில் தக்கவைத்துள்ளது.

priyansh arya
priyansh arya

ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஒவ்வொரு இந்திய திறமையான வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அந்த வரிசையில் நடப்பு ஐபிஎல்லின் சிறந்த கண்டுபிடிப்பாக பிரியான்ஷ் ஆர்யா இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com