கேப்டன் பதவியை விரும்பிய விராட்.. விரக்தியில் ஓய்வு.. நடந்தது என்ன?
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த அணியுடன் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தச் சூழலில் இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து, முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான விராட் கோலியும் ஓய்வு பெற்றார். இருவரும் டெஸ்ட்டிலிருந்து அடுத்தடுத்து ஓய்வு பெற்றது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எனினும், விராட் கோலி இந்த முடிவை நீண்டகாலத்திற்கு முன்பே எடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி தொடங்கிய நிலையில், இந்திய அணி அதிலிருந்து மீள வேண்டுமானால் சில விஷயங்கள் மாற வேண்டும் என்பதை விராட் கோலி நன்கு அறிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, விராட் கோலி மீண்டும் கேப்டன் வாய்ப்பை எதிர்பார்த்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பிசிசிஐயோ வேறு நிலைகளைக் கொண்டிருந்தது. அணியை முற்றிலும் மாற்றும் பொருட்டு இளம் வீரருக்கு கேப்டன் பொறுப்பு வழங்க பிசிசிஐ முடிவு செய்ததாகவும், அதன் காரணமாகவே அவர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு, முன்னாள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் ஆலோசித்துள்ளார். அதன்பிறகு, முன்னாள் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுடனும் ஆலோசித்துள்ளார். ஆனால் அந்த உரையாடல் எந்த அளவிற்கு நிறைவேறியது என்பது இன்னும் தெரியவில்லை.
இதற்கிடையே, விராட் கோலிக்கும் வாரியத்தில் மிகவும் செல்வாக்குமிக்க நபர்களில் ஒருவரான ராஜீவ் சுக்லாவுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற இருந்தது. ஆனால் இந்திய - பாகிஸ்தான் தாக்குதலால் அந்தச் சந்திப்பு நடைபெறாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கருடன் இரண்டு முறை விராட் பேசியதாகவும், ஆனால் அவை எதுவும் விராட் கோலிக்குச் சாதகமாக அமையவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.