2026 IPL-ல் தோனி விளையாடுவாரா? | ”அவருக்குள் இன்னும் நெருப்பு இருக்கிறது" - உத்தப்பா ஓபன் டாக்!
2025 ஐபிஎல் தொடரில் மோசமான செயல்திறனை கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் முதல்முறையாக கடைசி இடம் பிடித்து மோசமான சாதனை படைத்தது.
தொடர் முழுவதும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 230 ரன்களை குவித்த சென்னை அணி பாசிட்டிவாக முடித்தது.
இந்த சூழலில் போட்டிக்கு பின் பேசிய மகேந்திர சிங் தோனி, ”அடுத்த சீசனில் விளையாடுவேனா மாட்டேனா என முடிவுசெய்ய இன்னும் 4-5 மாதங்கள் இருப்பதாகவும், நான் திரும்பி வருவேன் என்றும் சொல்லவில்லை வரமாட்டேன் என்றும் சொல்லவில்லை” என்று குறிப்பிட்டார்.
ஆனால் ”ஒருவர் தன்னுடைய செயல்திறன் சரியில்லை என ஓய்வை அறிவிக்கவேண்டுமென்றால், பலபேர் 22 வயதிலேயே ஓய்வை அறிவிக்கவேண்டும். உங்கள் உடல் தகுதி எப்படி இருக்கிறது, உங்களால் அணிக்கு உதவ முடியுமா என்பதே முக்கியம்” என்று தோனி கூறியது அடுத்த சீசனுக்கு நிச்சயம் திரும்புவார் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
தோனிக்குள் இன்னும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது..
2026 ஐபிஎல்லுக்கு தோனி மீண்டும் வருவாரா மாட்டாரா என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா, “தோனி தொடர்ந்து ஐபிஎல்லில் விளையாடுவாரா என்பது, அவரின் உடல்நிலை மற்றும் அவர் தன்னை எப்படி உணருகிறார் என்பதைப் பொறுத்தது. அவர் உண்மையிலேயே விளையாட விரும்புகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவருக்குள் இன்னும் நெருப்பு எரிந்துகொண்டிருக்கிறது. போட்டிக்குப் பிறகு அவர் பேசியதை பார்த்தால், தொடர்ந்து விளையாடவும் மீண்டும் கோப்பை வெல்லவும் அவருக்குள் நெருப்பு எரிகிறது என்பது தெளிவாகிறது.
அவருடைய உடல்நிலையை தயார்படுத்துவதற்கான உழைப்பை சரியாக செய்தால் 2026 ஐபிஎல்லில் நிச்சயம் விளையாடுவார். அது நடக்கவில்லை என்றால், மினி-ஏலத்திற்கு முன்பே தன்னுடைய ஓய்வை அறிவிப்பார். அதை நீங்கள் ஒரு ட்வீட் அல்லது இன்ஸ்டாகிராம் பதிவில் பார்ப்பீர்கள்” என்று உத்தப்பா பேசியுள்ளார்.