மகளிர் ஐபிஎல் 2025| உ.பி. வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டன் மாற்றம்.. இந்திய ஆல்ரவுண்டர் நியமனம்!
ஐபிஎல்லை போன்றே கிரிக்கெட் ரசிகர்களின் பெருமித்த வரவேற்பை பெண்கள் ஐபிஎல் என கூறப்படும் மகளிர் பிரீமியர் லீக்கும் பெற்றுள்ளது. பெண்கள் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக WPL தொடரானது 2023 முதல் தொடங்கி நடத்தப்பட்டுவருகிறது.
முதலிரண்டு சீசன்களில் முதல் சீசனை ஹர்மன்ப்ரீத் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது சீசனை ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணியும் WPL கோப்பைகளை கைப்பற்றி அசத்தின.
இந்நிலையில் 2025 மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், 2025 மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரும் பிப்ரவரி 14-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவிருக்கிறது.
உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டன் மாற்றம்..
முதலிரண்டு மகளிர் பீரிமியர் லீக் தொடர்களில் இரண்டு வெவ்வேறு அணிகள் கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், மீதமுள்ள அனைத்து அணிகளும் 2025 WPL தொடரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
அந்தவகையில் 2025 மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மாற்றமாக புதிய கேப்டனை அறிமுகப்படுத்தியுள்ளது உ.பி. வாரியர்ஸ் அணி. அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலியா நட்சத்திர வீராங்கனை அலிசா ஹீலி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிலையில், புதிய கேப்டனாக நட்சத்திர இந்திய வீராங்கனை தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை எக்ஸ் தள பக்கத்தில் பிரான்சைஸ் அணி பகிர்ந்துள்ளது.