Mustafizur Rahman
Mustafizur Rahman CSK

IPL 2024: முதல் சுற்றின் டாப் பெர்ஃபாமர்கள் யார்?

முதல் சுற்றில் மிரட்டிய வீரர்கள்: சாம்சன், பூரண், ரஸல் முன்னிலை!

IPL 2024 வெற்றிகரமாக தொடங்கிவிட்டது. ஒவ்வொரு அணியும் தலா ஒவ்வொரு போட்டி விளையாடியிருக்கின்றது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை வீழ்த்தி வெற்றிகரமாக சீசனைத் தொடங்கியது நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ். பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் தங்கள் சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கின்றன. சில பரபரப்பான போட்டிகள் நடந்திருக்கும் நிலையில், முதல் சுற்றில் அசத்திய டாப் 3 பேட்ஸ்மேன்கள், டாப் 3 பௌலர்கள் யார் யார்?

1. சஞ்சு சாம்சன் - 82*(52) vs லக்னோ சூபர் ஜெயின்ட்ஸ்

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்PTI

இந்த முதல் சுற்றின் டாப் ஸ்கோரர். லக்னோவுக்கு எதிரான போட்டியில் தன் அணிக்கு அட்டகாசமான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தார் சாம்சன். பேட்டிங் செய்வதற்கு கடினமான ஆடுகளம் என்று கருதப்பட்ட பிட்ச்சில் அநாயசமாக பேட்டிங் செய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியைக் காட்டிக்கொண்டே இருந்த அவர், 33 பந்துகளில் அரைசதம் கடந்தார். மொத்தம் 6 சிக்ஸர்கள் விளாசிய அவர், 157.69 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 82 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது அந்த அதிர்டி ஆட்டத்தால் தான் 193 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். கேப்டனாக முன்நின்று விளையாடி தன் அணியின் முதல் வெற்றிக்குக் காரணமாகவும் அமைந்திருக்கிறார் அவர்.

2. நிகோலஸ் பூரண் - 64*(41) vs ராஜஸ்தான் ராயல்ஸ்

Nicholas Pooran
Nicholas Pooran

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகப் பெரிய இலக்கை செட் செய்ய, லக்னோவுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. ஆனால் 60 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது களமிறங்கிய பூரண் முதலில் கேப்டன் ராகுலோடு சேர்ந்து விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்தார். அதன்பிறகு அதிரடி காட்டி லக்னோ அணிக்கு வெற்றிக்கான நம்பிக்கையைக் கொடுத்தார். 4 பௌண்டரிகள், 4 சிக்ஸர்கள் என விளாசிய பூரண் கடைசி வரை களத்தில் நின்று 64 ரன்கள் எடுத்தார். ஆனால் அது அந்த அணிக்குப் போதுமானதாக இருக்கவில்லை.

3. ஆண்ட்ரே ரஸல் - 64*(25) vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Andre Russell
Andre Russell

தான் யார் என்பதை இந்த சீசனின் முதல் போட்டியிலேயே காட்டி சந்தேகங்களுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைத்தார் ஆண்ட்ரே ரஸல். ஈடன் கார்டன் மைதானத்துக்கு திருவிழாவைக் காட்டிய அவர், 25 பந்துகளிலேயே 64 ரன்கள் விளாசி நைட் ரைடர்ஸ் 200 ரன்களைக் கடக்க உதவினார். 3 ஃபோர்களும், 7 சிக்ஸர்களும் விளாசிய அவர் 20 பந்துகளிலேயே அரைசதம் கடந்திருந்தார். மயாங்க் மார்கண்டே ஓவரில் தொடர்ந்து சிக்ஸர்களாக விளாசி வானவேடிக்கை நிகழ்த்தினார் அவர்.

4. முஸ்தாஃபிசுர் ரஹ்மான் - 4/29 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு

Mustafizur Rahman
Mustafizur Rahman PTI

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தன் அறிமுக போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியிருக்கிறார் முஸ்தாஃபிசுர் ரஹ்மான். மிரட்டலாக ஆடிக்கொண்டிருந்த ஃபாஃப் டு ப்ளெஸியை மூன்றாவது பந்திலேயே தன் டிரேட் மார்க் வைட் அவுட்சைட் ஆஃப் ஸ்லோ பால் மூலம் வீழ்த்தினார். அதே ஓவரில் ரஜத் படிதாரையும் தூக்கினார். 12வது ஓவரில் மீண்டும் திரும்பி வந்து கோலி, கிரீன் ஆகியோரையும் வெளியேற்றினார் அவர். இப்படி நான்கு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி இப்போது டாப் விக்கெட் டேக்கராகத் திகழ்கிறார் முஸ்தாஃபிசுர்.

5. ஜஸ்ப்ரித் பும்ரா - 3/14 vs குஜராத் டைட்டன்ஸ்

Bumrah
BumrahMumbai Indians

முதல் போட்டியிலேயே தன் முத்திரையைப் பதித்துவிட்டார் ஜஸ்ப்ரித் பும்ரா. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராக மிடில் ஓவர்களிலும், டெத் ஓவர்களிலும் அசத்தலாகப் பந்துவீசி நெருக்கடி ஏற்படுத்தினார் அவர். வீசிய 24 பந்துகளில் 14 டாட் பால்கள். ரித்திமான் சாஹா, டேவிட் மில்லர், சாய் சுதர்ஷன் என 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் அவர். அதிலும் சாஹாவின் ஸ்டம்புகளை தன் யார்க்கர் மூலம் தகர்த்த அவரது அந்தப் பந்து அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்தது.

6. டி நடராஜன் - 3/32 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Natarajan
NatarajanSwapan Mahapatra

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 208 ரன்கள் விளாசியது. ஆனால் அந்த இன்னிங்ஸில் வெறும் 32 ரன்கள் மட்டுமே கொடுத்தார் நடராஜன். மேலும் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார் அவர். அதிலும் கடைசி ஓவரில் ரஸல், ரிங்கு ஆகியோர் இருந்தபோது அசராமல் பந்துவீசினார் அவர். முதல் பந்திலேயே ரிங்குவை வெளியேற்றிய அவர், அதன்பிறகு 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார் அவர். தன் ஸ்பெஷல் யார்க்கர்களை சிறப்பாக வீசி சிறந்த டெத் பௌலர்களில் ஒருவர் என்ற தன் பெயரை தக்கவைத்துக்கொண்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com