
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் புள்ளிகள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது மட்டுமல்லாமல், முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதிப்பெற்றது. அந்த அணியின் சுப்மன் கில் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இவர் கடைசி லீக் போட்டியில் சதமும் அடித்து அசத்தினார். ஏற்கெனவே இந்திய அணிக்காக டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகளிலும் சதமடித்து கலக்கி வரும் அவரை, பலரும் புகழ்ந்து வருகிறார்கள். இந்திய அணியில் இப்போதிருக்கும் வீரர்களே சுப்மன் கில் ஆட்டத்தை பாராட்டி வருகிறார்கள். இந்த சீசனில் மட்டும் அவர் 575 ரன்களை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் இவரின் சாதனைகள் பற்றி 'இந்துஸ்தான் டைம்ஸ்'க்காக பேசிய ராபின் உத்தப்பா "சச்சின், விராட் கோலி போல் மாறும் திறமை உள்ளவராக நான் சுப்மன் கில்லைப் பார்க்கிறேன். வரும் காலத்தில் அவர்களை விட மிகப்பெரிய சாதனைகளை படைப்பார் இவர்.
இப்போது அவர் மிக அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். அதனால் மிக அனாயசமான பேட்டிங்கை மேற்கொண்டு வருகிறார். சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரையும் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய நம்பிக்கை விஷயங்களாக பார்க்கிறேன்" என்றுள்ளார்.