40 வயதில் 2 டி20 சதங்கள் விளாசிய டூபிளெஸி.. MI-ஐ வீழ்த்தி PlayOff சென்றது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்!
ஐபிஎல்லை தொடர்ந்து மேஜர் லீக் கிரிக்கெட் பிரான்சைஸ் டி20 தொடர் அமெரிக்காவில் நடந்துவருகிறது. 34 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் ‘சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், MI நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், சியாட்டில் ஓர்காஸ், வாஷிங்டன் ஃப்ரீடம்’ முதலிய 6 அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
லீக் சுற்று போட்டிகள் பரபரப்பாக நடந்துவந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், வாஷிங்டன் ஃப்ரீடம் முதலிய இரண்டு அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தின.
அதனைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற MI நியூயார்க் அணிக்கு எதிரான போட்டியில் வென்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 3வது அணியாக பிளேஆஃப்க்கு தகுதிபெற்று அசத்தியது.
தொடர்ச்சியாக 3வது முறையாக பிளேஆஃப்!
நேற்று நடந்த லீக் போட்டியில் MI நியூயார்க் அணியை எதிர்த்து விளையாடியது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மித் பட்டேல் 3 ரன்னுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுக்க, மறுமுனையில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் ஃபேஃப் டூபிளெஸி 9 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் என துவம்சம் செய்து 53 பந்தில் சதமடித்து அசத்தினார்.
அவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த டோனோவன் ஃபெரீரா 20 பந்தில் 5 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என பறக்கவிட்டு 53 ரன்கள் விளாசினார். டூபிளேஸி மற்றும் ஃபெரீராவின் அதிரடியால் 223 ரன்கள் குவித்தது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி.
மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய எம்ஐ நியூயார்க் அணி 20 ஓவரில் 184 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக கிரன் பொல்லார்டு 5 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் உடன் 39 பந்தில் 70 ரன்கள் அடித்தார்.
39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி, 3வது அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியது. வரிசையாக 3வது சீசனிலும் பிளேஆஃப்க்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது சூப்பர் கிங்ஸ் அணி. முந்தைய இரண்டு சீசனிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறாத சூப்பர் கிங்ஸ் அணி, 2025 மேஜர் லீக் கிரிக்கெட் தொடரிலாவது கோப்பை வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த சீசனில் மட்டும் 2 சதங்களை விளாசியிருக்கும் டூபிளெஸி, மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் 3 சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார்.