ஹர்திக் பாண்டியா விளையாட தடை.. சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் MI அணியை வழிநடத்தும் சூர்யகுமார்!
18-வது ஐபிஎல் சீசனானது மார்ச் 22 முதல் தொடங்கி மே 25-ம் தேதிவரை நடத்தப்படவிருக்கிறது.
கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத், குஜராத் டைட்டன்ஸ் முதலிய அணிகள் அடுத்த கோப்பைக்காகவும், கோப்பை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் முதல் கோப்பைக்காகவும் களமிறங்க உள்ளன.
2025 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அனைத்து அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.
ஏன் ஹர்திக் பாண்டியா விளையாட தடை?
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா கடந்த ஐபிஎல் சீசனில் மூன்று போட்டிகளில் மெதுவாக பந்துவீசியதற்காக ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் நடக்கவிருக்கும் ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் விளையாட முடியாததால், சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் வழிநடத்துவார் என ஹர்திக் பாண்டியாவும், மஹிலா ஜெயவர்த்தனேவும் கூறியுள்ளனர்.
அப்போது 3 கேப்டன்கள் தன் அணியில் இருப்பது அதிர்ஷ்டன் என்று பேசிய ஹர்திக் பாண்டியா, “ரோகித், பும்ரா, சூர்யகுமார் மூன்று கேப்டன்கள் என்னுடைய அணியில் இருப்பது என் அதிர்ஷ்டம். மூன்று பேரும் இந்தியாவிற்காக நிறைய போட்டிகளில் கேப்டன்சி செய்துள்ளனர், அவர்களின் அனுபவத்தை மும்பை இந்தியன்ஸ் அணியிலும் எடுத்துவருகின்றனர். எனக்கு எப்போதெல்லாம் அறிவுரை தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் என்னுடன் பக்கபலமாக இருக்கின்றனர்” என்று பேசியுள்ளார்.