”CSK-வை இப்படி நான் பார்த்ததேயில்லை” - படுதோல்விக்கான காரணத்தை பகிர்ந்து சுரேஷ் ரெய்னா வேதனை!
5 கோப்பைகளை வென்ற சாம்பியன் அணியாகவும், ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு அதிகமுறை சென்ற ஒரே அணியாகவும் இருந்துவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எந்த ஐபிஎல் சீசனிலும் இல்லாதவகையில் நடப்பு சீசனில் படுமோசமான கிரிக்கெட்டை விளையாடிவருகிறது.
18 வருட ஐபிஎல் வரலாற்றில் ஓரிரண்டு மோசமான சீசன்களை சென்னை அணி கொண்டிருந்தபோதிலும், நடப்பு சீசனை போல ஒரு படுகேவலமான கிரிக்கெட்டை விளையாடியதில்லை.
8 போட்டிகளில் விளையாடி 6 ஆட்டத்தில் தோல்வியை சந்தித்திருக்கும் சென்னை அணி குறித்து பேசியிருக்கும் முன்னாள் நட்சத்திர சிஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா தோல்விக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நல்ல வீரர்களை சென்னை அணி தேடவில்லை..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான நிலை குறித்து பேசியிருக்கும் சுரேஷ் ரெய்னா, “ஐபிஎல் ஏலத்திலேயே சிஎஸ்கே அணியும், உரிமையாளர்களும் சிறப்பாக செயல்படவில்லை என நினைக்கிறேன். கைகளில் நிறைய பணம் இருந்தும் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ், கே.எல். ராகுல் போன்றோரை மெகா ஏலத்தில் விட்டுவிட்டனர். ஏலத்தில் பிரியான்ஸ் ஆர்யா போன்ற ஏராளமான இளம், திறமையான வீரர்கள் இருந்தனர்.
தலைமை பயிற்சியாளர் உட்பட அணி நிர்வாகம் நல்ல வீரர்களைத் தேடவில்லை என்பதே, சிஎஸ்கே-வின் இந்நிலைக்கு முக்கிய காரணம். ஐ.பி.எல். வரலாற்றிலேயே சிஎஸ்கே இப்படி தடுமாறியதை நான் பார்த்ததில்லை” என்று பேசியுள்ளார்.