’இந்த லிஸ்ட்லயும் இணைந்த CSK-RR..’ 2019 பைனலில் வாங்கிய அதே அடி! 1 ரன்னில் த்ரில் வெற்றிபெற்ற SRH!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவுசெய்தது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி.
rr vs srh
rr vs srhpt

ஐபிஎல் வரலாற்றில் சில போட்டிகள் மட்டும்தான், ஒரு அணிக்கு காலத்திற்கும் அழியாத மகிழ்ச்சியையும், மற்றொரு அணிக்கு காலத்திற்கும் மறையாத வடுவையும் விட்டுச்செல்லும். அது எப்போதும் நியாபகத்தில் இருந்து அழியாமல் “அந்த ஒரு ரன்ன மட்டும் அடிச்சிருந்தா” என மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி புலம்ப வைக்கும். அப்படியொரு போட்டியைதான் நேற்று ராஜஸ்தான் அணி தங்களுக்கு பரிசாக பெற்றுக்கொண்டது.

ஒரு பரபரப்பான போட்டியில் இரண்டு சமபலம் கொண்ட அணிகளான, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகள் மோதிக்கொண்டன. சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பேட் கம்மின்ஸ், ராஜஸ்தான் அணியை முதலில் பந்துவீசுமாறு கேட்டுக்கொண்டார்.

rr vs srh
“ரிங்கு சிங் எந்த தவறும் செய்யவில்லை; அது எங்களுக்கே கடினமான முடிவு” - அஜித் அகர்கர் வருத்தம்

அதிரடியில் மிரட்டிய நிதிஸ் ரெட்டி..

மிக மிக வலுவான பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் அணி, மீண்டுமொரு 250 ரன்கள் டோட்டலை எடுத்துவரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடுகளமானது பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த சன்ரைசர்ஸ் அணி தடுமாறியது. 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என சென்ற போட்டியில், பொறுப்பை தனதாக்கி கொண்ட டிராவிஸ் ஹெட் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரைசதமடித்து அசத்தினார்.

நிதிஸ் ரெட்டி
நிதிஸ் ரெட்டி

ஒருபுறம் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாடிய டிராவிஸ் ஹெட் 58 ரன்னில் வெளியேற, மறுமுனையில் சிக்சர் பவுண்டரி என பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிய நிதிஸ் ரெட்டி 3 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என துவம்சம் செய்து 76 ரன்கள் குவித்து மிரட்டிவிட்டார். உடன் கடைசியாக வந்த க்ளாசன் அவருடைய பங்கிற்கு 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என விளாசி ரன்களை எடுத்துவர, 20 ஓவர் முடிவில் 201 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எடுத்துவந்தது சன்ரைசர்ஸ் அணி.

rr vs srh
“ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரர் யாரும் இல்லை” - அஜித் அகர்கர் ஆதரவு!

பதிலுக்கு பதிலடி கொடுத்த ஜெய்ஸ்வால் - பராக்

நடப்பு ஐபிஎல் தொடரில் சேஸிங்கில் தோற்றதே இல்லை என்ற ரெக்கார்டை வைத்திருக்கும் ராஜஸ்தான் அணி, எப்படியும் வெற்றிபெற்றுவிடும் என்ற எண்ணத்தில் பேட்டிங் ஆடியது. ஆனால் பந்து திரும்பக்கூடிய ஆடுகளத்தில் நான்தான் ராஜா என பந்துவீசிய புவனேஷ்வர் குமார், முதல் ஓவரிலேயே அதிரடி வீரர் பட்லர் மற்று கேப்டன் சஞ்சு சாம்சன் இருவரையும் அடுத்தடுத்து 0 ரன்னில் வெளியேற்றி கலக்கிப்போட்டார். 1 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த ராஜஸ்தான் அணியை, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் இருவரும் மீட்டுவர போராடினர்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

அதற்குபிறகு விக்கெட்டையே விட்டுக்கொடுக்காத இந்த ஜோடி 6 சிக்சர்கள், 15 பவுண்டரிகள் என பறக்கவிட்டு அடுத்தடுத்து அரைசதம் எடுத்துவந்து மிரட்டியது. 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு ராஜஸ்தான் அணியை வெற்றியின் பக்கம் திருப்பிய இந்த ஜோடியை, ஜெய்ஸ்வாலின் ஸ்டம்புகளை தகர்ந்தெறிந்து பிரித்துவைத்தார் தமிழக வீரர் நடராஜன்.

என்னதான் ஜெய்ஸ்வால் வெளியேறினாலும் ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துசெல்லாமல் விடமாட்டேன் என அதிரடியில் மிரட்டிய ரியான் பராக், சன்ரைசர்ஸ் அணிக்கு தலைவலியை ஏற்படுத்தினார். 77 ரன்னில் களத்தில் கெத்துக்காட்டிய பராக்கை, சன்ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ் வெளியேற்றி அசத்தினார்.

ரியான் பராக் - ஜெய்ஸ்வால்
ரியான் பராக் - ஜெய்ஸ்வால்

செய்யவேண்டியதை எல்லாம் தரமாக செய்துவிட்டு பராக் வெளியேற, கடைசி 4 ஓவர்களுக்கு 43 ரன்கள்தான் தேவையென்ற எளிதான நிலையிலேயே இருந்தது போட்டி. ஷிம்ரன் ஹெட்மயர், ரொவ்மன் பவல் என்ற இரண்டு ஹிட்டர்கள் களத்தில் இருக்கும் போது, சன்ரைசர்ஸ் பக்கம் ஆட்டத்தை திருப்ப வேண்டுமென்றால் எதாவது மேஜிக் தான் நடக்கவேண்டும் என போட்டி மாறியது. ஆனால் சரியான நேரத்தில் இந்த மேஜிக்கையா கேட்டீங்க என்பது போல் ஹெட்மயரை வெளியேற்றிய நடராஜன், 18வது ஓவரில் வெறும் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து கலக்கிப்போட்டார்.

rr vs srh
”எங்களுடைய தேர்வு யார் சிறந்தவர் என்பதை பொறுத்து அல்ல” - அணிதேர்வு குறித்து அஜித் அகர்கர் விளக்கம்

1 ரன்னில் த்ரில் வெற்றிபெற்ற SRH!

கடைசி 2 ஓவருக்கு 20 ரன்கள் தேவையென போட்டி மாற, 19வது ஓவரை வீசிய பாட் கம்மின்ஸ் துருவ் ஜுரேலை வெளியேற்றியது மட்டுமில்லாமல் வெறும் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க, ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியின் கைகள் ஓங்கியது. கடைசி 6 பந்துக்கு 13 ரன்கள் தேவையென போட்டி மாற, களத்திலிருந்து ரோவ்மன் பவல் புவனேஷ்குமார் வீசிய அபாரமான பந்துவீச்சுக்கு எதிராக 11ரன்களை எடுத்துவந்து மிரட்டிவிட்டார். ரோவ்மன் பவலுக்கு சன்ரைசர்ஸ் அணியின் ஃபீல்டர்களும் ரன்களை விட்டுக்கொடுக்க, கடைசி 1 பந்துக்கு 2 ரன்கள் என்ற பரிதாபமான நிலைக்கு எடுத்துச்சென்றது சன்ரைசர்ஸ் அணி.

புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர் குமார்

அந்த பக்கமா இந்த பக்கமா என மாறிய போட்டியில், கடைசிவரை நம்பிக்கையை விடாமல் இருந்த புவனேஷ்வர் குமார், ரோவ்மன் பவலை LBW விக்கெட்டில் வெளியேற்ற யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது சன்ரைசர்ஸ் அணி. பட்லர், சஞ்சு சாம்சன் இருவரையும் டக் அவுட்டில் வெளியேற்றியது மட்டுமில்லாமல், கடைசி பந்தில் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்ற புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

rr vs srh
தமிழ்நாடு வீரர்கள் மட்டும் 2 மடங்கு உழைக்கணுமா? காலங்காலமா வஞ்சிக்கப்படுகிறோம்! பத்ரிநாத் ஆதங்கம்!

2019-ல் சம்பவம் செய்த மலிங்கா!

இதுபோன்று ஒரு பேட்ஸ்மேன் 1 ரன்னுக்கு 2 ரன்கள் தேவையென்ற இடத்தில் LBW விக்கெட்டில் வெளியேறி, எதிரணி 1 ரன்னில் வெற்றிபெறுவது இதற்கு முன்னரும் ஐபிஎல்லில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை இதே மைதானத்தில் 2019-ல் நிகழ்த்திக்காட்டியவர் மும்பை அணியின் ஸ்டார் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா.

2019ம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில், ஷர்துல் தாக்கூரின் விக்கெட்டை கடைசிபந்தில் வீழ்த்தி 1 ரன்னில் மும்பையை வெற்றிக்கு அழைத்துச்சென்றது மட்டுமில்லாமல் சிஎஸ்கே ரசிகர்களின் இதயங்களை உடைத்தார் லசித் மலிங்கா. தற்போது அதேபோலான ஒரு மோசமான தோல்வியை ராஜஸ்தான் அணியும் அடைந்து சிஎஸ்கே அணியுடன் தங்களை இணைத்துள்ளது.

2019 ஐபிஎல் பைனல்
2019 ஐபிஎல் பைனல்

‘தோத்தது ராஜஸ்தான் அணிதான், நீங்க ஏன்ப்பா அழுவுறிங்க?’ என கேட்டால், ‘2019 பைனல் நியாபகம் வந்துடுச்சு சகோ’ என கூறி சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் கூறும் அளவுக்கு, நேற்றைய போட்டி ஒரு த்ரில்லர் போட்டியாக அமைந்தது.

மலிங்கா
மலிங்கா

இந்த பரபரப்பான வெற்றிக்கு பிறகு சிஎஸ்கே அணியை பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி.

rr vs srh
‘3 ஐபிஎல் அணியிலிருந்து 12 வீரர்கள் தேர்வு..’ ஓரங்கட்டப்பட்ட 2 அணி! WC சென்ற IPL அணி வீரர்கள் யார்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com