நீங்கலாம் மனுசங்களே இல்ல தெரியுமா.. 286 ரன்கள் குவித்த SRH! புதிய உலக சாதனை!
18வது ஐபிஎல் சீசனாக 2025 ஐபிஎல் தொடர் கோலகலமாக தொடங்கப்பட்டு நடந்துவருகிறது. 5 கோப்பைகளுடன் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள், 3 கோப்பைகளுடன் கொல்கத்தா அணி, மேலும் தலா 1 கோப்பையுடன் ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நீடிக்கும் நிலையில், அடுத்த கோப்பை யாருக்கு என்ற பலப்பரீட்சையில் 10 அணிகள் களம்கண்டுள்ளன.
கலை நிகழ்ச்சிகளுடன் மார்ச் 22-ம் தேதியான நேற்று தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சிறப்பான் தொடக்கத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் இரண்டாவது நாளில் மும்பை vs சிஎஸ்கே அணிகளும், சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
286 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ்..
ஹைத்ராபாத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வுசெய்தார். எதற்காக சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வுசெய்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி கடந்த ஐபிஎல்லை எந்த இடத்தில் விட்டார்களே அதேபோலான அதிரடியான ஆட்டத்தையே மீண்டும் வெளிப்படுத்தினர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 5 பவுண்டரிகளை விரட்ட, டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டினார்.
அபிஷேக் 24 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 67 ரன்கள் அடித்து வெளியேறினாலும் அடுத்துவந்த இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் கிளாசன் என அனைவரும் அதிரடியான ஆட்டம் ஆடி மிரட்டிவிட்டனர்.
4 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிய நிதிஷ் குமார் 30 ரன்களும், 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என துவம்சம் செய்த கிளாசன் 34 ரன்களும் அடித்து வெளியேறினார்.
ஒருபுறம் நிலைத்து நின்று 11 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என ருத்ரதாண்டவம் ஆடிய இஷான் கிஷன் 47 பந்தில் 107 ரன்களை குவித்து அசத்த, 20 ஓவரில் 286/6 ரன்களை குவித்தது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி.
உலக சாதனை படைத்த சன்ரைசர்ஸ் அணி..
2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன்கள் அடித்ததன் மூலம் உலக சாதனை படைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
அனைத்து வடிவ டி20 கிரிக்கெட்டிலும் 4 முறை (287, 286, 277, 266) 250 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே அணியாக மாறி உலகசாதனை படைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இரண்டாவது இடத்தில் இந்தியாவும், சர்ரே அணியும் 3 முறை அடித்து நீடிக்கின்றன.
287 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிக்காக போராடி வருகிறது.