ஐபிஎல் 2025| ராஜஸ்தானை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி வெற்றி!
18வது ஐபிஎல் சீசனாக 2025 ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. மார்ச் 22-ம் தேதி தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ஆர்சிபி அணி.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான், சென்னை vs மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
286 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் அணி!
ஹைத்ராபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி, டிராவிஸ் ஹெட் மற்றும் இஷான் கிஷனின் அதிரடியான ஆட்டத்தால் 286 ரன்களை குவித்து மிரட்டியது.
இஷான் கிஷன் 106 ரன்கள், டிராவிஸ் ஹெட் 67 ரன்கள், நிதிஷ் குமார் மற்றும் கிளாசன் 30 மற்றும் 34 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 286/6 ரன்களை குவித்தது சன்ரைசர்ஸ் அணி.
போராடிய ஜுரேல், சாம்சன்.. 44 ரன்னில் தோல்வி!
287 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜெய்ஸ்வால் 1 ரன், கேப்டன் ரியான் பராக் 4 ரன் மற்றும் நிதிஷ் ரானா 10 ரன்னிலும் வெளியேற, 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜுரேல் இருவரும் அணியை மீட்டுவர போராடினர்.
12 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் என பறக்கவிட்ட இந்த ஜோடி ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கை கொடுத்தாலும், சாம்சன் 66 ரன்னிலும், துருவ் ஜுரேல் 70 ரன்னிலும் வெளியேற நம்பிக்கை இழந்தது.
கடைசியாக வந்து ஷுபம் துபே மற்றும் ஹெட்மயர் இருவரும் 8 சிக்சர்களை பறக்கவிட்டாலும் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியால் 242 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முடிவில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.