சர்ஃப்ரஸ் கான் தேர்வு செய்யப்படாதது ஏன்? - சுனில் கவாஸ்கர் சொன்ன முக்கிய விஷயம்!
மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வுக்குப் பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்திய அணியில் தற்போது ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் சாய் சுதர்சனும் இடம்பிடித்துள்ளார். இவருடன் அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அதேநேரத்தில், முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கழற்றிவிடப்பட்டுள்ளனர். மேலும், ரஞ்சிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் சர்ஃப்ராஸ் கானுக்கும் இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 10 கிலோ வரை எடையையும் குறைத்திருந்தார்.
எனினும் அவர் தேர்வு செய்யாதது குறித்து இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கர், “சில நேரங்களில், சரியான முடிவுகளை எடுப்பது மிக முக்கியம். உதாரணமாக, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சர்ஃபராஸ் சதம் அடித்தார், ஆனால். அவரது ஃபார்மைத் தொடர முடியவில்லை. அணி நிர்வாகம் எடுக்க வேண்டிய தேர்வுகள் இவை. கருண் உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்களில் ஒருவராக இருந்தார், மேலும் அவருக்கு முந்தைய டெஸ்ட் அனுபவம் உள்ளது, மேலும் கவுண்டி கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “இது மிகவும் கடினமான முடிவு; ஆனால், இதுதான் கிரிக்கெட். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது உங்களது இடத்தை இறுகப் பிடித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு சதம் அடித்தாலும், அடுத்த இன்னிங்ஸில் அந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது. முந்தைய இன்னிங்ஸில் சதம் அடித்தோம் என நினைத்து இருக்கக் கூடாது. உங்கள் பார்வை எப்போதும் ஆட்டத்தின் மீதே இருக்க வேண்டும்; மேலும் ரன்களைக் குவிக்க வேண்டும் என நினைக்க வேண்டும். மற்றவர்களுக்கு வாய்ப்பளித்து, உங்களை நீங்களே அணியிலிருந்து வெளியே தள்ளிக்கொள்ளக் கூடாது. அணியில் உங்கள் வாய்ப்பைத் தக்க வைப்பது என்பது முற்றிலும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
நீங்கள் தொடர்ந்து கதவைத் தட்டிக்கொண்டே இருக்க வேண்டும்; கதவுகளை உடைத்து எறிய வேண்டும். நீங்கள் அணியில் இருந்து நீக்க முடியாத வீரராக உங்களை மாற்ற வேண்டும். இதற்கு முன்பும் நாம் இதுபோல நடந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து அவர், “ஒரு தொடரில் அணி தோற்றுவிட்டால், 13-வது, 14-வது மற்றும் 15-வது வீரர்களை அணியில் இருந்து நீக்குவார்கள். எனவே, உங்கள் வாய்ப்புகளை நீங்கள்தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதுபோலவே, கருண் நாயர் தொடர்ந்து பெரிய சதங்களை அடித்துக்கொண்டே இருந்தார். அதனால்தான் தேர்வுக் குழு அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்திருக்கிறது. ஒரு பேட்ஸ்மேன் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்றால், அவரை நம்பி நாம் பந்தயம் கட்டலாம். அவர் ரன்கள் குவிக்கிறார், கவுண்டி சாம்பியன்ஷிப்பிலும் அவருக்கு அனுபவம் உள்ளது. எனவே, அவரை மீண்டும் இந்திய கிரிக்கெட்டுக்கு அழைத்தது ஒரு நல்ல முடிவு” எனத் தெரிவித்துள்ளார்.