‘அவர நீங்க எதுக்கு டிஸ்டர்ப் பண்ணீங்க...’ - ஹர்திக் பாண்ட்யா மீது சேவாக், கவாஸ்கர் கடும் விமர்சனம்!

நல்ல ஃபார்மில் இருந்த மோஹித் சர்மாவிடம் தேவையில்லாமல் சென்று பேச்சுக் கொடுத்தது ஏன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்திர சேவாக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
Hardik pandya-Mohit sharma
Hardik pandya-Mohit sharmaTwitter

ஐபிஎல் வரலாற்றிலேயே இறுதிப்போட்டி மிக நீண்டதாக அமைந்தது என்றால் இந்த வருட இறுதிப் போட்டி தான் என்று சொல்லலாம். மழைக் காரணமாக ஞாயிற்றுக்கிழமை போட்டி, திங்கள் கிழமையான ரிசர்வ் டேவுக்கு மாற்றப்பட்டு , பின்னர் அன்றும் மழை பெய்ததால், இரண்டாவது இன்னிங்ஸ் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு 15 ஓவர்களாக மாற்றப்பட்டது. அதில் கடைசி ஓவருக்கு முன்னதாக குஜராத் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றிப்பெற 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மோகித் சர்மா வீசிய முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கப்படாத நிலையில், இரண்டாவது பந்தில் ஷிவம் துபே ஒரு ரன் எடுக்க, மூன்றாவது பந்தில் ஜடேஜா ஒரு ரன் எடுத்தார். மூன்று பந்துகளும் சரியான அளவில் யார்க்கராக வீசப்பட்டு குஜராத் அணியின் கட்டுப்பாட்டுக்குள் போட்டி இருந்தது. 4-வது பந்து லோ புல் டாசாக வீச, அந்தப் பந்தில் ஷிவம் துபே ஒரு ரன் எடுத்திருந்தார்.

அப்போது, மோஹித் சர்மாவுக்கு தண்ணீர் பாட்டில் வர, அப்போது கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அவரிடம் சென்று ஏதோ பேசிக் கொண்டிருந்தார். குஜராத் அணியின் பயிற்சியாளர் நெஹ்ராவும், தண்ணீர் கொடுத்துவிடுவதைப் போல மெசேஜ் சொல்லியனுப்பியிருந்தார். அதன்பிறகு 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மோஹித் சர்மா வீசிய கடைசி இரண்டு பந்துகளையும் ஸ்ட்ரைக்கரில் இருந்த ஜடேஜா சிக்ஸராகவும், பவுண்டரியாகவும் அடித்து சென்னை அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். ஹர்திக் பாண்ட்யா பேசிவிட்டு சென்றப்பின்பு மோஹித் வீசிய இரண்டு பந்துகளும் ஆட்டத்தின் போக்கையே மாற்றி குஜராத் அணிக்கு தோல்வியை தேடிக் கொடுத்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக இந்தியா டுடேவுக்கு பேட்டியளித்துள்ள முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், “மோஹித் கடைசி ஓவரின் அந்த முதல் 3-4 பந்துகளை மிகவும் அற்புதமாக வீசினார். பின்னர் சில விசித்திரமான காரணங்களுக்காக அவருக்கு ஒரு ஓவரின் நடுவில் சிறிது தண்ணீர் அனுப்பப்பட்டது. அப்போது கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வந்து அவரிடம் பேசினார். பந்து வீச்சாளர் கடைசி ஓவரின் ரிதத்தில் இருக்கும்போது, ​​யாரும் சென்று அவரிடம் எதுவும் சொல்லக்கூடாது. தூரத்தில் இருந்து வேண்டுமானால், நன்றாக பந்து வீசினாய் என்று உற்சாக வார்த்தைகளை சொல்லலாம். அவரிடம் செல்வது, அங்கு சென்று பேசுவது, சரியான செயல் அல்ல. திடீரென்று மோஹித் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தார். மோஹித் தனது திட்டத்தைச் செயல்படுத்தும்போது அந்தப் பேச்சு தேவையில்லை. அழுத்தம் நிறைந்த கடைசி ஓவரை வீசுவது சாதாரண விசயம் கிடையாது, அதை ஒருவர் சரியாக செய்து கொண்டிருக்கும் போது, எதற்காக அவரை தொந்தரவு செய்து கவனத்தை கலைக்க வேண்டும். அங்குதான் அவருடைய பௌலிங் ரிதம் பாதிக்கப்பட்டதாக கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Sunil Gavaskar
Sunil GavaskarFile Image

இதேபோல், முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் கிரிக்பஸ் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “ஒருவர் நன்றாக யார்க்கர்களுடன் பந்து வீசும்போது, நீங்கள் ஏன் அவரிடம் சென்று பேச வேண்டும்?. பேட்ஸ்மேன் 2 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றிபெற்றுவிடுவார் என்பது பந்துவீச்சாளருக்கு தெரியும். அதனால் அந்த பந்துகளை யார்க்கர்களாக வீச வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். பிறகு ஏன் அவருடைய நேரத்தை வீணடிக்கிறீர்கள்?. அந்த கடைசி இரண்டு பந்துக்கு முன்னதாக மோஹித், பேட்ஸ்மேனுக்கு ரன்கள் கொடுத்திருந்தால், அவரிடம் சென்று பேசுவதில் நியாயம் உள்ளது. ஆனால் பந்து வீச்சாளர் தனது வேலையை நன்றாக செய்யும்போது, நீங்கள் ஏன் சென்று பேச வேண்டும். கடைசி இரண்டு பந்துகளில் பந்துவீச்சாளருக்கு களத்தில் ஏதேனும் மாற்றங்களை (ஃபீல்டிங்கை மாற்ற) விரும்புகிறாரா என்ற கவலையில் கூட கேப்டன் அங்கு பேச வந்திருக்கலாம். ஆனாலும், நான் அங்கு இருந்திருந்தால், நான் அவரை தொந்தரவு செய்திருக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com