“ஷாக்காகி நகர மறுத்த ஸ்டோய்னிஸ்”- நம்பமுடியாத டர்னிங்கால் ஸ்டம்பை தகர்த்த ஜடேஜா!

லக்னோவிற்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், அதிரடி வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸை அற்புதமான ஒரு சுழல்-பந்தில் போல்டாக்கி வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா.
Jadeja, Stoinis
Jadeja, StoinisTwitter

ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில், கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் இன்னும் அடுத்து சுற்றுக்கான பந்தயத்தில் உயிர்ப்புடன்தான் இருக்கின்றன. எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என்றே கூறமுடியாத வகையில், புள்ளிப்பட்டியல் வலுவாகவே இருக்கிறது. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி வந்த லக்னோ அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக, லோ-ஸ்கோர் என்கவுண்டரில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் அடுத்த வெற்றியை கைப்பற்றியே ஆகவேண்டிய கட்டாயத்தில், சிஎஸ்கே அணிக்கு எதிராக களமிறங்கியுள்ளது.

CSK Team
CSK TeamTwitter

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி, பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். சிஎஸ்கே அணிக்கு இருக்கும் சுழல் பட்டாளத்தை வைத்து பார்த்தால், இன்றைய போட்டியும் ஒரு லோ-ஸ்கோரிங் போட்டியாகவே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. எதிர்ப்பார்த்ததைபோல் சென்னை அணியின் ஸ்பின்னர்கள், லக்னோ அணியை தலைகீழாக திருப்பி போட்டனர்.

என்ன நடந்ததென்று அதிர்ச்சியில் உறைந்த ஸ்டோய்னிஸ்!

பவர்பிளே முடிந்த பிறகு லக்னோவை மேலும் கட்டுப்படுத்த விரும்பிய கேப்டன் எம்.எஸ்.தோனி, பந்தை ரவீந்திர ஜடேஜாவின் கையில் கொடுத்தார். அதிரடி வீரர் ஸ்டோய்னிஸிற்கு எதிராக 5-ஆவது பந்தை வீசிய ஜடேஜா, ஒரு ஃபுல் லெந்த் டெலிவரியை லெக் சைடில் வீசினார். அந்தப் பந்தை ஸ்டோய்னிஸ் ஸ்டிரைட் டிரைவ்க்கு ஆட, பந்தானது ஒரு நம்பமுடியாத டர்னிங்கால் பேட்ஸ்மேனை ஏமாற்றி, லெக் சைடிலிருந்து திரும்பி ஆஃப் ஸ்டம்பை தகர்த்தது.

இதை சற்றும் நம்பமுடியாத ஸ்டோய்னிஸ், ஒருகணம் என்ன நடந்தது என்ற அதிர்ச்சியில் உறைந்தே போனார். சில நொடிகள் பந்தையும், ஸ்டம்பையும் பார்த்துக்கொண்டே இருந்த அவர், நகரவே இல்லை. அப்படி ஒரு அற்புதமான பந்துவீச்சை வீசிய ஜடேஜா, 6 ரன்னில் ஸ்டோய்னிஸை வெளியேற்றினார்.

ஜடேஜாவிற்கு இது முதல்முறை அல்ல!

இப்படி ஒரு அதிகளவிலான டர்னிங்கால் பேட்ஸ்மேனை முழுமையாக ஏமாற்றி விக்கெட்டை, தட்டித்தூக்குவதெல்லாம் ஜடேஜாவிற்கு புதுமையான விசயம் இல்லை. இதை அவர் பலமுறை ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டரான ஸ்டீவ் ஸ்மித்திற்கு எதிராக செய்துகாட்டியுள்ளார்.

Smith
SmithTwitter

2020-ல் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, "ஜடேஜாவிற்கு எதிராக இந்தியாவில் விளையாடுவது சவாலான விசயம்" என்று ஸ்மித் கூறியிருந்தார். அந்தத் தொடரில் இதே போன்ற ஒரு மாயாஜால டர்னிங்கில் ஸ்டம்பை பறிகொடுத்த ஸ்டீவ் ஸ்மித், ஸ்டம்பையும் ஜடேஜாவையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே நின்றிருப்பார். அதேபோல் தற்போது முடிந்த 2023-ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போதும், ஸ்மித்தை தன் சுழலால் மிரட்டியிருப்பார் ஜடேஜா.

கூக்ளி பந்தை வைத்திருக்கும் லெக்ஸ் பின்னர்களைவிட, ஜடேஜா சிறப்பான பவுலிங் டெக்னிக்கை வைத்திருக்கிறார். அவருடைய பலம் என்னவென்றால், அவருடைய சரியான லைன் மற்றும் லெந்துதான். கூர்மையாக அதிலேயே பந்துவீசும் அவர், வேரியேசனையும் வைத்திருக்கிறார். ஸ்டிரைட் பந்து மற்றும் சுழற்பந்து இரண்டும் அவர் கையில் இருந்து ஒரே மாதிரியாகவே வெளிப்படுகிறது. துணைக்கண்டங்களில் ஜடேஜாவை எதிர்த்து விளையாடுவது சவாலானது” என்று தெரிவித்திருந்தார் ஸ்டீவ் ஸ்மித்.

சுழலில் மிரட்டிய ஜடேஜா, மொயின் அலி, தீக்சனா!

சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள், முதல் பத்து ஓவரிலேயே லக்னோவின் பாதி பேட்டர்களை வெளியேற்றி அசத்தினர். ஓரே ஓவரில் மனன் வோரா மற்றும் க்ருணால் பாண்டியாவை தீக்சனா வெளியேற்ற, ஒரு ஸ்டன்னிங் டெலிவரியில் ஸ்டோய்னிஸை வெளியேற்றி மிரட்டி விட்டார் ஜடேஜா.

Theekshana
TheekshanaTwitter

இவர்கள் தான் ஒருபுறம் என்றால், இதை போன்ற ஆடுகளத்தில் நானும் களத்தில் இருக்கிறேன் என்று அற்புதான சுழல்பந்துவீச்சை வெளிப்படுத்திய மொயின் அலி, ஒரு பவுண்டரியை கூட விட்டுக்கொடுக்காமல், 4 ஓவரில் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com