”தோனியால் 10 ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாது..” உண்மையை போட்டுடைத்த ஃபிளெமிங்!
2025 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிளே ஆஃப் செல்லும் அணியாக பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்தடுத்த 2 தோல்விகளுக்கு பிறகு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேப்பாக்கத்தில் வென்ற சிஎஸ்கே அணி, 2வது போட்டியில் 17 வருடத்திற்கு பிறகு ஆர்சிபிக்கு எதிராக சேப்பாக்கத்தில் தோல்வியடைந்தது. அதனைத்தொடர்ந்து குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 6 ரன்களில் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணி 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் நீடிக்கிறது.
மோசமாக விளையாடும் சிஎஸ்கே அணி..
இந்த இரண்டு தோல்வியிலும் கேட்ச்சை கோட்டைவிட்டது, மோசமான பவுலிங், பேட்ஸ்மேன்களின் பேட்டிங் ஆர்டரில் மாற்றம், மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பல், மோசமான கேப்டன்சி என சிஎஸ்கே அணி பல்வேறு தவறுகளை செய்தது.
ஆனாலும் இவ்வளவு தவறுகளை கடந்து ஆர்சிபி அணிக்கு எதிராக தோனி விரைவாகவே பேட்டிங் செய்ய வராதது கடுமையான விமர்சனங்களை பெற்றுக்கொடுத்தது. 9வது வீரராக அஸ்வினுக்கு பிறகு பேட்டிங் செய்ய வந்த தோனி 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 16 பந்தில் 30 ரன்கள் அடித்தார். இதனால் ஏன் முன்னதாகவே பேட்டிங் செய்ய வரவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
இந்த சூழலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முன்னதாகவே பேட்டிங் செய்ய களமிறங்கிய தோனி, வெற்றிபெற 2 ஓவரில் 39 என்ற தேவை என்ற இடத்திலிருந்து அணியை கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் கொண்டுசென்றார். 19வது ஓவரில் ஜடேஜா மற்றும் தோனி இருவரும் சேர்ந்து 19 ரன்கள் அடிக்க, 20வது ஓவரில் நல்ல ஷாட்டை தோனி அடித்தாலும் ஒரு சிறப்பான கேட்ச் மூலம் அவுட்டாக்கினார் ஹெட்மயர்.
இந்த சூழலில் தோனி எதனால் 9வது வீரராக பின்வரிசையில் பேட்டிங் செய்ய வருகிறார் என்ற கேள்விக்கு சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பதிலளித்தார்.
அவரால் 10 ஓவர்கள் நிலைத்து பேட்டிங் செய்ய முடியாது..
ராஜஸ்தான் உடனான தோல்விக்கு பிறகு பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், ”தோனி எந்த இடத்தில் இறங்கவேண்டும் என்பது சூழலுக்கு தகுந்தார்போல் முடிவெடுக்கப்படுகிறது. அவரது உடலும், முழங்கால்களும் முன்பு இருந்ததைப் போல இல்லை. அவர் நன்றாக நகர்கிறார், ஆனால் கால்களில் இன்னும் ஒரு தேய்மானம் இருக்கிறது.
அவரால் 10 ஓவர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாது. எனவே அவரால் எங்களுக்கு என்ன கொடுக்க முடியும் என்பதை அன்றைய போட்டியில் அவர் மதிப்பிடுவார். அன்றைய ஆட்டம் சமநிலையில் இருந்தால், அவர் கொஞ்சம் முன்னதாகவே பேட்டிங் செல்வார், இல்லையென்றால் மற்றவீரர்களுக்கு ஆதரவளிப்பார். அவர் அணிக்காக தன்னால் முடிந்தவற்றை சமநிலையில் செய்துவருகிறார்” என்று பேசியுள்ளார்.