'விரக்தியான சீசன்'.. சின்ன பையன் எங்களை மொத்தமாக டாமினேட் செய்துவிட்டார்.. ஃபிளெமிங் வேதனை!
2025 ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றிபெற்றது. ஆனால் அதற்குபிறகான 4 போட்டிகளில் வரிசையாக தோற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் நீடிக்கிறது.
இதில் சொந்த மண்ணில் நடந்த போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக 17 ஆண்டுகளுக்கு பிறகும், டெல்லி அணிக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கு பிறகும் சேப்பாக்கத்தில் தோற்ற சிஎஸ்கே அணி, எந்த சீசனிலும் இல்லாதவகையில் சொந்த மண்ணிலேயே மோசமாக செயல்பட்டுவருகிறது.
இந்த சூழலில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 83/5 என பஞ்சாப் பேட்டிங்கை சிதறடித்த சிஎஸ்கே அணி, அதற்குபிறகு 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தி 136 ரன்களை விட்டுக்கொடுத்து பஞ்சாப் அணியை 219 ரன்கள் குவிக்க அனுமதித்தது. இது அவர்களை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ காரணமாக அமைந்தது.
39 பந்தில் சதமடித்த 24 வயது இளம் வீரரான பிரியான்ஸ் ஆர்யா தனியொரு ஆளாக சிஎஸ்கே அணியை டாமினேட் செய்து, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.
விரக்தியான சீசன் - ஏமாற்றத்தை வெளிப்படுத்திய ஃபிளெமிங்!
நான்கு தொடர் தோல்விக்குபிறகு பேசியிருக்கும் சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங், "நாங்கள் ஃபீல்டிங்கில் மந்தமாக இருந்தோம். அதனாலேயே எங்களுக்கு அழுத்தம் அதிகமானது, அந்த இளைஞன் பிரியான்ஸ் ஆர்யா சில அற்புதமான ஷாட்களை அடித்தார். அவர் வலுவாக இருந்த பகுதிகளில் நாங்கள் அதிகப்படியான பந்தை வீசினோம். அதன்மூலம் எழுந்த அழுத்தத்திற்கு நாங்கள் கொஞ்சம் அடிபணிந்தோம், விரைவாக அவருக்கு எதிரான திட்டத்தை சரிசெய்ய தவறவிட்டோம்.
முதல் பந்திலிருந்தே பிரியான்ஸ் ஆர்யா மிகச் சிறப்பாக விளையாடினார். இரண்டாவது பந்தில் கேட்ச் கொடுக்கும் வாய்ப்பை கொடுத்தபிறகும், இதுபோன்ற அச்சமற்ற ஆட்டத்தை ஆட முயற்சிப்பது மிகவும் துணிச்சலானது.
இந்த சீசன் இதுவரை எங்களுக்கு விரக்தியான சீசனாகவே அமைந்துள்ளது. ஆனால் எங்களுடைய தொடக்க வீரர்களிடமிருந்து ரன்கள் வந்தது நல்ல விசயமாக எங்களுக்கு அமைந்தது’ என்று பேசியுள்ளார்.