தென்னாப்பிரிக்காவை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றிருக்கும் பௌலர்கள்!

இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பௌலர்கள் பட்டியலில் டாப் 10ல் இரண்டு தென்னாப்பிரிகக் வீரர்கள் இருக்கிறார்கள்.
Kagiso Rabada
Kagiso RabadaLynne Sladky

டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. இதுதான் அந்த அணி விளையாடப்போகும் முதல் ஐசிசி உலகக் கோப்பை ஃபைனல். இந்த உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலுமே வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது மார்க்ரமின் அணி. அவர்களின் இந்த அசத்தல் செயல்பாட்டுக்கு முக்கியக் காரணம் அந்த அணியின் பந்துவீச்சு.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளை இந்த உலகக் கோப்பையில் வீழ்த்தியிருந்ததால் ஆப்கானிஸ்தான் நிச்சயம் தென்னாப்பிரிக்காவுக்கு சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்கா பெரும் ஆதிக்கம் செலுத்தியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து ஆப்கானிஸ்தான் அணி 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க பௌலர்கள் ஷம்ஸி, யான்சன் தலா 3 விக்கெட்டுகளும், ரபாடா, நார்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

இந்தப் போட்டி வெற்றி பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய மார்க்ரம், "நாங்கள் டாஸ் தோற்றது மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். ஏனெனில் நான் டாஸ் ஜெயித்திருந்தாலும் பேட்டிங் தான் தேர்வு செய்திருப்பேன். நல்லவேளையாக எங்கள் பௌலர்கள் சரியான இடங்களில் பந்துவீசி அவர்களுக்கு சவால் கொடுத்தார்கள். சரியான லைனில், சரியான லென்த்தில் பந்துவீசி ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் எளிதாக ஆடிட முடியாமல் செய்தார்கள்" என்று கூறினார்.

இந்தப் போட்டி மட்டுமல்லாமல், இந்தத் தொடர் முழுவதுமே தென்னாப்பிரிக்க பௌலர்கள் ஜொலித்திருப்பதாகப் பாராட்டியிருக்கிறார் மார்க்ரம். "அவர்கள் இந்தத் தொடர் முழுவதுமே எங்களுக்காக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பெரிதாக எதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை. அனைத்தையும் சிம்பிளாக வைத்துக்கொண்டனர். சூழ்நிலையை, கண்டிஷனை சரியாக ஆராய்ந்து அதற்கு ஏற்ப தங்கள் திட்டங்களைத் தீட்டினார்கள். அதன்மூலம் எங்கள் உலகக் கோப்பை பயணித்தில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார்கள்" என்று கூறினார் தென்னாப்பிரிக்க கேப்டன்.

மார்க்ரம் சொன்னது உண்மை தான். பெயர்போன அவர்களின் பேட்டிங் யூனிட் ரொம்பவுமே தடுமாறியது. கேப்டன் மார்க்ரம், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் போன்றவர்கள் ரன் சேர்க்கவே தடுமாறினார்கள். கிளாசன் கூட தன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இருந்தாலும் அவர்களின் பந்துவீச்சு டாப் கிளாஸாக இருந்தது தான் அவர்கள் தோல்வியே சந்திக்காமல் இவ்வளவு தூரம் வந்ததற்குக் காரணம்.

Kagiso Rabada
"கோலி தன்னுடைய பெஸ்ட்டை ஃபைனலுக்கு சேமித்து வைத்திருக்கலாம்" - ரோஹித் ஷர்மா

இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பௌலர்கள் பட்டியலில் டாப் 10ல் இரண்டு தென்னாப்பிரிகக் வீரர்கள் இருக்கிறார்கள். 4 போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கும் தப்ராய்ஸ் ஷம்ஸி கூட 11வது இடத்தில் இருக்கிறார். அந்த அளவுக்கு அனைவருமே விக்கெட்டுகள் குவித்திருக்கிறார்கள்.

இந்த டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிகக் பௌலர்கள்:

ஆன்ரிக் நார்கியா: 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகள், எகானமி - 5.64
ககிஸோ ரபாடா: 8 போட்டிகளில் 12 விக்கெட்டுகள், எகானமி - 5.88
தப்ராய்ஸ் ஷம்ஸி: 4 போட்டிகளில் 11 விக்கெட்டுகள், எகானமி - 7.37
கேஷவ் மஹாராஜ்: 7 போட்டிகளில் 9 விக்கெட்டுகள், எகானமி - 6.08
மார்கோ யான்சன்: 8 போட்டிகளில் 6 விக்கெட்டுகள், எகானமி - 6.03
ஓட்னீல் பார்ட்மேன்: 5 போட்டிகளில் 6 விக்கெட்டுகள், எகானமி - 4.94
எய்டன் மார்க்ரம்: 4 இன்னிங்ஸ்களில் 2 விக்கெட்டுகள், எகானமி - 6.62

இந்த நம்பர்களைப் பார்த்தாலே ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா! கிட்டத்தட்ட அனைத்து பௌலர்களுமே ஆறுக்கும் குறைந்த எகானமியில் பந்துவீசியிருக்கிறார்கள். ஒவ்வொருவருமே கிடைத்த வாய்ப்புகளில் தங்களின் திறமையை நிரூபித்திருக்கிறார்கள். மார்கோ யான்சன் மற்றவர்களைப் போல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை என்றாலும், பவர்பிளேவில் சிக்கனமாகப் பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறார். அதன்மூலம் இன்னொரு எண்டில் புதிய பந்தோடு வரும் ஓட்னீல் பார்ட்மேன், ரபாடா போன்ற பௌலர்களுக்கு விக்கெட்டுகள் விழுந்திருக்கின்றன.


பார்ட்மேன் எனும்போது அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வேகப்பந்துவீச்சு சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த அந்த அணியில் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காது என்று அவருக்குத் தெரியும். அதனால் கிடைத்த வாய்ப்புகளை அற்புதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் அவர். வெறும் 4.94 என்ற எகானமியில் மிரட்டியிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸில் இரண்டாவது ஸ்பின்னராக ஷம்ஸி வேண்டும் என்பதால் அவரை அனைத்து போட்டிகளிலும் அந்த அணியால் ஆடவைக்க முடியவில்லை. அவருக்குப் பதிலாக வந்த ஷம்ஸியும் சும்மா இல்லை. வெறும் நான்கே போட்டிகளில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் இந்த மாய சுழற்பந்துவீச்சாளர். இப்படி ஒவ்வொருவரும் விக்கெட் எடுக்கும்போது எதிரணியால் என்ன செய்ய முடியும்!

ஆனால், இந்த பௌலிங் அட்டாக்கில் மிகப் பெரிய ஆச்சர்யம் நார்கியா. தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டுவந்த அவர், மோசமான ஃபார்மில் இருந்தார். இந்த ஐபிஎல் தொடரில் தன் ஸ்பெல்லில் 50+ ரன்களெல்லாம் கொடுத்த அவர், விரைவிலேயே டெல்லி கேபிடல்ஸ் அணியில் தன் இடத்தை இழந்தார். அதனால் அவர்மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது. ஆனால், தான் எதற்குப் பெயர் போனவர் என்பதை இந்த டி20 உலகக் கோப்பையில் நிரூபித்திருக்கிறார் அவர். ஒவ்வொரு பந்திலும் நெருப்பைக் கக்கியிருக்கும் அவர், அந்த அணியின் டாப் ஸ்கோரராக உருவெடுத்திருக்கிறார்.

இந்த 8 போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்திருக்கிறார்கள் தென்னாப்பிரிக்க பௌலர்கள். ஆனால், அவர்கள் இன்னும் ஒரு போட்டியில் தங்கள் திறமையை நிரூபிக்கவேண்டும். அதுவே அவர்கள் வரலாறு படைக்க உதவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com