15-ஆவது ஓவரில் 87% ஆக இருந்த வெற்றி வாய்ப்பு.. எங்கு கோட்டை விட்டது தென்னாப்பிரிக்கா?

இந்திய வெற்றியை நாம் கொண்டாடும்போது, தென்னாப்பிரிக்காவின் துரதிர்ஷ்டம் ரசிகர்களை வருத்தமடைய செய்கிறது. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் தோல்விக்கான காரணம் என்ன? சற்று கூர்ந்து பார்க்கலாம்....
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள்
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள்pt web

இந்தியாவை 180 ரன்களுக்குள் சுருட்டிய தென்னாப்ரிக்கா

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக முன்னேறிய தென்னாப்பிரிக்கா, சம பலம் கொண்ட இந்தியாவை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது. பந்து வீச்சு, பீல்டிங் என சிறப்பாக செயல்பட்ட தென்னாப்பிரிக்கா, வலுவான இந்திய பேட்டிங் வரிசையை 180 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது.

அடுத்து பேட் செய்த தென்னாப்பிரிக்கா தொடக்கத்திலேயே ஹென்ட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் மார்க்ரமை இழந்தது. அதேநேரத்தில் டி காக், ஸ்டப்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரன் ரேட் சீராக இருக்குமாறு பார்த்துக் கொண்ட இருவரும் தலா 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

அதன்பிறகு வந்த கிளாசன் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துகளை சிக்ஸர்களாக பறக்கவிட, மில்லர் நிதானமாக விளையாடினார். அக்ஸர் வீசிய 15 ஆவது ஓவரில் கிளாசன் அதிரடியாக விளையாடி 24 ரன்கள் சேர்த்தார். அப்போது தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

தொடரும் துரதிர்ஷ்டம்

ஆனால், 16 ஆவது ஓவரை வீசிய பும்ரா வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு நெருக்கடியை கூட்டினார். 24 பந்துகளுக்கு 26 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட திக் திக் நிமிடத்தில் ஹர்திக் பாண்டியா வீசிய வைடு யார்க்கரை தொட்ட கிளாசன் பந்த்திடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதற்கு பும்ரா வீசிய முந்தைய ஓவரின் பதற்றமே காரணம் எனலாம்.

அதன்பிறகும் தென்னாப்பிரிக்க அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. அந்த ஓவரிலும் 4 ரன்களை சேர்த்தது தென்னாப்பிரிக்கா. 18-ஆவது ஓவரை பும்ரா வீச, முதல் 2 பந்துகளில் ரன் எடுக்க முடியாமல் திணறினார் மில்லர். அவரது பேட்டிங்கில் பயமும் பதற்றமும் தெரிந்தது. 3 ஆவது பந்தில் அவர் சிங்கிள் எடுக்க, பும்ராவின் வேகத்தில் யான்சென் கிளீன் போல்ட் ஆனார்.

அதன் பிறகு வந்த மகாராஜ், கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தது பெரிய தவறாக பார்க்க தோன்றியது. முக்கியமான 19-ஆவது ஓவரில் முதல் 2 பந்துகளில் மகாராஜ் ரன் எதையும் எடுக்கவில்லை. வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரில் தென்னாப்பிரிக்கா வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீச தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. மழையும் தூரல் விழுத் தொடங்கியது. ஃபுல் டாஸாக விழுந்த முதல் பந்தை மில்லர் நேராக விளாசினார். சிக்ஸர் லைன் எட்டவிருந்த அந்த பந்தை சிறப்பாக கேட்ச் பிடித்து அசத்தினார் சூர்யகுமார். அப்போதே தென்னாப்பிரிக்கா அணியின் உலகக் கோப்பை வெல்லும் கனவு தகர்ந்தது. ஓவர் முடிவில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவுக்கு மீண்டும் துரதிர்ஷ்ட அணி என்ற பெயரை வழங்கியது இந்தியா.

15-ஆவது ஓவரில் 87% ஆக இருந்த வெற்றி வாய்ப்பு

15 ஆவது ஓவர் முடிவில் 87 சதவீதமாக இருந்த தென்னாப்பிரிக்காவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது, துரதிர்ஷ்டம் என்பதை தாண்டி, ஒரு முக்கிய போட்டியில் இயல்பாக ஏற்படும் பதற்றத்தை கட்டுப்படுத்தி வெற்றிக்கனியை வசப்படுத்தும் மனநிலை தென்னாப்பிரிக்காவுக்கு இல்லை என்பதையே இத்தனை ஆண்டுகளின் வரலாறு காட்டுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com