“அன்று தோனி விளையாடுவதை நிறுத்தியதால்தான் இன்று ரிஷப் பந்த்..” - இளம் வீரர்களுக்கு கங்குலி அறிவுரை!

ரிஷப் பந்த் இல்லாத இடத்தை மற்ற இளம் வீரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குநர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
தோனி, ரிஷப் பந்த்,
தோனி, ரிஷப் பந்த்,ட்விட்டர்

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 16-வது சீசன் ஐபிஎல் போட்டி, கடந்த 31-ம் தேதி துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 7-வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

கங்குலி, ரிஷப் பந்த்,
கங்குலி, ரிஷப் பந்த், ட்விட்டர்

இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குநர் சௌரவ் கங்குலி, நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்றவர்களின் இடத்தை யாராலும் அணிகளில் நிரப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்த வீரர்கள் இல்லாதது மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு பெரும் இழப்பே என்றுக் கூறிய அவர், எனினும் இவர்கள் இல்லாத வாய்ப்பை அணிகளில் இடம்பெறும் மற்ற இளம் வீரர்கள் பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், செய்தியாளர்கள் சந்திப்பில் கங்குலி தெரிவித்துள்ளதாவது, “வீரர்கள் அணியில் இடம் பெறாமல் போகும்போது, யாராவது ஒரு வீரர் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பாக இதை நான் பார்க்கிறேன். ஏனெனில், தோனி தேசிய அணியில் விளையாடுவதை நிறுத்தியதில் இருந்துதான், ரிஷப் பந்த் அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறந்து விளங்கி வருகிறார். அதைப்போன்றதுதான் இதுவும். அப்படித்தான் வீரர்கள் ஒரு அணியில் உருவாகிறார்கள்.

உதாரணமாக, சுப்மன் கில் நாளுக்குநாள் பேட்டிங்கில் முன்னேறி வருவதையும், ருதுராஜ் கெய்க்வாட் நன்றாக விளையாடி வருவதையும் நீங்கள் பார்க்கலாம். அதனால் இது ஒரு நல்ல வாய்ப்பு. ரிஷப் இந்தத் தொடரை தவறவிட்டாலும், அதைவிட மிக முக்கியமானது அவர் குணமடைவதுதான்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், டெல்லி அணியை உற்சாகப்படுத்த, அருண் ஜெட்லி மைதானத்திற்கு ரிஷப் பந்த் வருவார் என்று கூறப்படுகிறது.

25 வயதான ரிஷப் பந்த், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி தனது தாயாருக்கு சர்ப்ரைஸ் தருவதற்காக டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை சென்றுக்கொண்டிருந்தபோது, அவர் ஓட்டிச் சென்ற கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவரது கார் தீப்பற்றிய நிலையில், காருக்குள் படுகாயங்களுடன் கிடந்த ரிஷப் பந்தை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பிறகு அறுவை சிகிச்சை முடிந்து, தற்போது ஓய்வில் இருந்து வரும் ரிஷப் பந்த், மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கான முழு உடற் தகுதிப்பெற முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com