ஐசிசி ODI தரவரிசையில் 2வது இடம்.. NO.1 இடம் பிடிக்க 11 புள்ளிகளே மீதம்! ஸ்மிரிதி மந்தனா அசத்தல்!
இலங்கை, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா முதலிய மூன்று மகளிர் அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடர் கடந்த ஏப்ரல் 17 முதல் மே 11 வரை நடைபெற்றது.
7 போட்டிகள் அடங்கிய முத்தரப்பு தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 342 ரன்கள் குவித்த இந்திய அணி இலங்கையை அவர்களின் சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை தட்டிச்சென்றது. அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்மிரிதி மந்தனா 101 பந்தில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உதவியுடன் 116 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார்.
ஐசிசி தரவரிசையில் 2வது இடம் பிடித்த ஸ்மிரிதி மந்தனா!
நடந்து முடிந்த முத்தரப்பு தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அரைசதம், இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் சதம் என விளாசிய ஸ்மிரிதி மந்தனா, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 3வது இடத்திலிருந்து முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
727 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய ஸ்மிரிதி மந்தனா, முதலிடத்திலிருக்கும் தென்னாப்பிரிக்காவின் லாரா வால்வார்ட்டை விட 11 புள்ளிகள் பின்தங்கியுள்ளார். விரைவில் முதலிடத்தை ஸ்மிரிதி பிடிப்பார் என்ற எதிப்பார்ப்பு எழுந்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது இடத்திலிருக்கும் ஸ்மிரிதி, டி20 தரவரிசையில் 3வது இடத்தில் நீடிக்கிறார்.
ஆண்களுக்கான தரவரிசை பட்டியலை பொறுத்தவரையில், டெஸ்ட் தரவரிசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 இடத்திலும், ஒருநாள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடம், ரோகித் சர்மா 3-வது இடம், விராட் கோலி 5-வது இடமும் பிடித்துள்ளனர். டி20 தரவரிசையில் டிராவிஸ் ஹெட் முதலிடம், அபிஷேக் சர்மா 2-ம் இடம், திலக் வர்மா 4-ஆம் இடம் மற்றும் சூர்யகுமார் யாதவ் 5-ஆம் இடமும் பிடித்து அசத்தியுள்ளனர்.
அணிகளின் தரவரிசையில் ஆண்கள் கிரிக்கெட்டில் இந்தியா டெஸ்ட்டில் 4வது இடமும், ஒருநள் கிரிக்கெட் மற்றும் டி20 தரவரிசையில் முதலிடமும் பிடித்து அசத்தியுள்ளது.
பெண்கள் கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் இந்தியா 3வது இடத்தில் நீடிக்கிறது.