
டெல்லி பேட்ஸ்மேன் சால்ட்டிடம் பெங்களூர் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வம்பிழுத்ததால் நேற்று நடைபெற்ற ஐபிஎல்லின் 50 ஆவது லீக் போட்டியில் பரபரப்பு நிலவியது.
ஐபிஎல் தொடரின் 50 ஆவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்களை எடுத்தது. இந்தப் போட்டியில் மெதுவாக விளையாடினாலும் களத்தில் நின்று ஆட்டம் காட்டிய விராட் கோலி அரை சதமடித்தார். அதன் பின்பு வந்த மஹிபால் லோம்ரோர் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கி அவரும் அரை சதத்தை பதிவு செய்து கெத்து காட்டினார்.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள், பெங்களுர் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். பொதுவாகவே தனது வேகப்பந்தின் மூலம் முதல் விக்கெட்டை விரைவாக எடுத்துக்கொடுப்பார் முகமது சிராஜ். ஆனால் நேற்றைய போட்டியில் அவரது பந்துவீச்சை வார்னரும், சால்ட்டும் பொளந்து கட்டினர். இதனால் 5 ஓவர்களுக்குள்ளாகவே டெல்லி அணி 50 ரன்களை கடந்து அசத்தியது.
அப்போது, 5 ஆவது ஓவரை வீசிய சிராஜின் பந்துவீச்சில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசினார். அடுத்து ஒரு பந்தை டாட் பாலாக வீசிய சிராஜ், சால்ட்டிடம் வம்பிழுத்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனை மறுமுனையில் பார்த்துக்கொண்டிருந்த டேவிட் வார்னர் சிராஜிடம் விசாரிக்க அவரிடமும் கை விரல்களை நீட்டி கோவமாக பேசினார் சிராஜ். இதனையடுத்து கள நடுவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானாப்படுத்தினர். இதனால் ஆட்டத்தில் சில நேரம் பரபரப்பு நிலவியது.
போட்டி முடிந்ததும், இருவரும் கேசுவலாக கைகுலுக்கிக் கொண்டதால், ' Its all in the game ' என சொல்லிக்கொண்டனர் ரசிகர்கள்.