கேப்டனான முதல் போட்டியிலேயே பிரச்னையா.. ஷுப்மன் கில்லுக்கு அபராதம்? நடந்தது என்ன?
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி, தற்போது வரை 7 விக்கெட் இழப்புக்கு 454 ரன்கள் எடுத்துள்ளது. இதில் தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (101), கேப்டன் ஷுப்மன் கில் (147), துணை கேப்டன் ரிஷப் பண்ட் சதம் (134) ஆகியோர் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தியுள்ளனர். அனுபவ வீரர்கள் ஓய்வுபெற்ற நிலையில், இங்கிலாந்து மண்ணில் இளம்படை அசத்தி வருவது உலக ஜாம்பவான்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இப்போட்டியில் பேட் செய்த ஷுப்மன் கில், விதியை மீறி கறுப்பு சாக்ஸ் அணிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மே 2023இல் புதுப்பிக்கப்பட்ட விதியின்படி, வீரர்கள் வெள்ளை, கிரீம் அல்லது வெளிர் சாம்பல் நிற சாக்ஸ்களை மட்டுமே அணிய வேண்டும். இதைமீறி அந்தத் தவறை வேண்டுமெனச் செய்தால் நம்பர் 1 குற்றமாக வகைப்படுத்தப்படும். இதுபோன்ற சூழ்நிலையில், கில்லுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 10 முதல் 20 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம். இருப்பினும், போட்டி நடுவருக்கு விருப்புரிமை அதிகாரம் உள்ளது. கில்லின் சாக்ஸ் தேர்வு ஈரமான அல்லது சேதமடைந்த உபகரணங்கள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளால் ஏற்பட்டால், அந்த விஷயம் தற்செயலான தவறாகக் கருதப்படாமல் போகலாம்.