
“கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடிய போது தான் எனக்குள் இந்த மாற்றம் ஏற்பட்டது” என்று மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் சதம் விளாசிய குஜராத் வீரர் சுப்மன் கில் பேசியுள்ளார்.
மும்பை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற Qualifier-2 ஆட்டத்தில் குஜராத் அணியின் சுப்மன் கில் அதிரடி சதமடித்தார். இதனால் குஜராத் அணி ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிப் பெற்றுள்ளது. அந்த அணி இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சுப்மன் கில் நேற்று 60 பந்துகளில் 129 ரன்களை விளாசினார். இதில் 10 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். மும்பை 62 ரன்களுக்கு வீழ்ந்ததையடுத்து, நேற்றையப் போட்டியில் சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது பேசிய சுப்மன் கில் “கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடிய போது தான் எனக்குள் இந்த மாற்றம் ஏற்பட்டது. 2021 ஆம் ஆண்டு எனக்கு காயம் ஏற்பட்டவுடன் அந்த நேரத்தில் என்னுடைய பேட்டிங்கில் சில மாற்றங்களை செய்தேன். என்னுடைய டெக்னிக்குகளை மாற்றினேன். என் மீது இருக்கும் எதிர்பார்ப்புகளை எப்படி எதிர்கொள்வது என்பதை கற்றுக் கொண்டேன். ஐபிஎல் தொடரில் நான் ஆடியதில் இதுதான் சிறந்த இன்னிங்ஸாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.
மேலும் பேசுகையில் “என்னுடைய வெற்றிக்கு காரணம் சூழலுக்கு தகுந்த மாதிரி ஒவ்வொரு பந்தையும் நான் எதிர்கொள்கிறேன் என்பதுதான். நேற்று ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடித்த பிறகுதான் ‘இது என்னுடைய நாள்’ என்று எனக்கு தோன்றியது. ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. இதனால் என்னுடைய ஷாட்டுகளை விருப்பம்போல் ஆடினேன். நம்பிக்கை முக்கியமாக இருக்க வேண்டும். ஒரு நல்ல சர்வதேச கிரிக்கெட் சீசனுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இப்போது நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்றுள்ளார் சுப்மன் கில்.