
ஐபிஎல்-ல் ஐதராபாத் அணிக்கு எதிராக சதமடித்ததன் மூலம் சுப்மன் கில் பல்வேறு சாதனைகளை படைத்ததுடன், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 62 ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய குஜராத் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது ஐதராபாத் அணி. ஆனால் அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனையடுத்து குஜராத் அணி 34 ரன்களில் வெற்றிப்பெற்று, இந்த ஐபிஎல் சீசனில் 18 புள்ளிகள் பெற்று முதல் அணியாக Play Off சுற்றுக்கு தகுதிப்பெற்றது.
இந்தப் போட்டியில் சுப்மன் கில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாஹாவுடன் தொடக்க வீரராக களமிறங்கிய அவர் 58 பந்துகளில் 101 ரன்களை விளாசினார். இதில் மொத்தம் 13 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். இந்தப் போட்டியில் சதம் அடித்து அசத்திய இளம் வீரரான சுப்மன் கில், இதன் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
குறிப்பாக இந்த போட்டியின் மூலம் குஜராத் அணிக்காக தனது 1,000 ரன்களை பூர்த்தி செய்த சுப்மன் கில், இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்காக அதிகவேகத்தில் 1,000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 31 இன்னிங்ஸில் 1,000 ரன்களை கடந்திருந்தார். சுப்மன் கில் இந்தச் சாதனையை 29 ஆவது இன்னிங்ஸில் முறியடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கே.எல். ராகுல் 23 இன்னிங்ஸில் இந்தச் சாதனையை படைத்து முதலிடத்தில் இருக்கிறார்.
இந்திய அணிக்காக விளையாடி வரும் சும்பன் கில் அனைத்து ஃபார்மட்களிலும் விளையாடி வருகிறார். மேலும் அவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்துள்ளார். இத்துடன் சேர்த்து இப்போது ஐபிஎல் டி20 தொடரிலும் சதமடித்து அசத்தியுள்ளார் சுப்மன் கில்.