’ஸ்ரேயாஷ் ஐயர் எனும் மெஜீசியன்..’ - எந்த ஐபிஎல் கேப்டனும் செய்யாத பிரமாண்ட சாதனை!
ஐபிஎல் வரலாற்றில் ஒரேயொரு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கும், இருமுறை மட்டுமே பிளேஆஃப்க்கும் சென்றுள்ள மோசமான அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி வலம்வருகிறது.
நல்ல வீரர்களுக்காக பலகோடிகளை ஏலத்தில் கொட்டினாலும், அவ்வணிக்கு வரும் வீரர்கள் யாரும் போதுமான அளவு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை. அதனாலயே பஞ்சாப் அணி வெற்றி அணியாக இதுவரை வலம்வந்ததில்லை.
இந்த சூழலில் ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்திருப்பது பஞ்சாப் அணிக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது. அதன் பலமாக தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் பிளேஆஃப்க்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
எந்த கேப்டனும் செய்யாத சாதனை படைத்த ஸ்ரெயாஸ்..
ஏற்கனவே வரிசையாக 8 வெற்றிகளை பதிவுசெய்த ஐபிஎல் கேப்டனாக தோனியின் சாதனையை சமன்செய்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியை பிளேஆஃப் சுற்றுக்கு அழைத்துசென்றதன் மூலம் பிரத்யேக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி 2014-ம் ஆண்டுக்குபிறகு 11 வருடங்கள் கழித்து ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளை பிளேஆஃப் சுற்றுவரை அழைத்துச்சென்ற முதல் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் வரலாறு படைத்துள்ளார். டெல்லி, கொல்கத்தாவை தொடர்ந்து பஞ்சாப் அணியையும் பிளேஆஃப் வரை அழைத்துவந்துள்ள ஸ்ரேயாஸ் புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளார்.
* 2020 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை இறுதிப்போட்டிவரை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர், இறுதிப்போட்டியில் மும்பைக்கு எதிராக தோல்வியை தழுவினார். இதுவரை டெல்லி அணி ஒரேயொரு முறை மட்டுமே ஐபிஎல் ஃபைனலில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
* அதேபோல 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர், 10 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா அணியை கோப்பைக்கு வழிநடத்தினார்.
* தற்போது 2025 ஐபிஎல் தொடரில் 11 ஆண்டுகளுக்கு பிறகு பிளேஆஃப்க்கு பஞ்சாப் அணியை வழிநடத்தியுள்ளார்.
இப்படி கேப்டனாக தொட்டதெல்லாம் தங்கமாக மாறிவரும் ஸ்ரேயாஸ் ஐயர், இறுதிப்போட்டிவரை பஞ்சாப் அணியை வழிநடத்தினால் 3 வெவ்வேறு அணிகளை ஐபிஎல் ஃபைனல் வரை அழைத்துச்சென்ற பெருமையையும் ஸ்ரேயாஸ் ஐயர் பெறுவார்.